மஹிந்த, மைத்திரி கோட்டைகளுக்குள் பிளவு! – சதுரங்க அரசியலின் முக்கிய கட்டம் நகர்ந்தது

தற்போதைய அவதானிப்புகளின்படி சமகால அரசியலில் முக்கிய பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்துள்ளதாகவும், இதனால் கூடிய விரைவில் பல்வேறுபட்ட திருப்புமுனைகள் ஏற்படலாம் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் முக்கியமானது ஜனாதிபதி மற்றும் மைத்திரி ஆகியோருக்கிடையிலான பிளவு. ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியோடு சுதந்திரக் கட்சியின் பூசல்கள் அதிகரித்து வந்த நிலையில் இரு தரப்பு மோதல் நிலைகள் தொடர்பான அரசியல் களம் பெரிதாக பேசப்படவில்லை.

ஆனாலும் தற்போதைய சூழலில் இரு தரப்பும் விமர்சனங்களை முன்வைத்து வருவது மாத்திரமில்லாமல், ஜனாதிபதியும், பிரதமர் மற்றும், ஐக்கிய தேசிய கட்சி தொடர்பான சாடலை பகிரங்கமாக முன்வைத்து வருகின்றார்.

பிரதி சபாநாயகர் பதவிக்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் சுதர்ஷினி பர்னாண்டோபுள்ளேவும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஆனந்த குமாரசிறியும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.

இதன் போது மைத்திரி சுதர்ஷினி பர்னாண்டோபுள்ளேவிற்கு ஆதரவு வழங்குமாறு சுதந்திரக் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். எனினும் அவருடைய ஆலோசனைகளை சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் சிலர் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல மறுமுனையில், ஒன்றிணைந்த கூட்டு எதிரணி தரப்பிடம் சுதர்ஷினி பர்னாண்டோபுள்ளேவிற்கே ஆதரவு வழங்க வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் கூட்டு எதிரணித் தரப்பில் 18 பேர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையில் இருந்து வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதாவது இதுவரையிலும் மஹிந்தவை ஆதரித்து வந்த கூட்டு எதிரணித் தரப்பு அவரை எதிர்க்க ஆரம்பித்துள்ளது. மறுமுனையில் மைத்திரி தலைமைத்துவம் வகிக்கும் சுதந்திரக் கட்சியும் அவருடைய கருத்துகளை புறமொதுக்கியுள்ளதாகவே தோன்றுகின்றது.

Related posts