கம்பெரலியத் திட்டத்துக்கான முன்மொழிவுகளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், உரிய நேரத்தில் வழங்காமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதன் காரணத்தால், 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தி, மட்டக்களப்பு மக்களுக்குக் கிடைக்காது போயுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
கம்பெரலியத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட மகிழவட்டுவானில் புனரமைக்கப்பட்ட கொங்கிறீட் வீதியை, மக்களின் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (30) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மஹிந்த ராஜபக்ஷவால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தை, ஜனநாயகத்தின் வழியில் நின்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தோற்கடித்துள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த காலத்தில், பல உறவுகள் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்றும் இதற்குக் காரணமாக ராஜபக்ஷ ஆட்சியினர் இருந்தனர் என்றும் குற்றஞ்சாட்டிய அவர், எனவேதான், ராஜபக்ஷ ஆட்சியினருக்கு எதிராகத் தாம் செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், ராஜபக்ஷ ஆட்சியினருடன், தமது நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தாவினார் என்றும் சுட்டிக்காட்டிய அவர், எதிர்வரும் தேர்தல்களில் அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்தார்.
தங்களது சுய இலாபத்துக்காகவும் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும் யாராவது கட்சி மாறுவார்களானால், அவர்களுக்குரிய தண்டனை, வாக்குச் சீட்டுகள் மூலம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக மக்களைச் சென்றடையவேண்டும். அதில் பிச்சை வாங்கும் நடவடிக்கையில் நாங்கள் ஒரு போதும் ஈடுபட மாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
‘உரிய காலத்தில் முன்மொழிவுகளை வழங்காமையால் மட்டக்களப்புக்கு ரூ.100 மில். இழப்பு’