நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையினால் தமிழ்மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி அனைத்தையும் இழந்து பாரிய பின்னடைவுக்குத் தள்ளப்பட்டதில் இருந்து இன்னும் மீளமுடியாதவர்களாக காணப்படுகின்றனர்
கடந்த 30 வருடங்களாக ஏற்பட்ட யுத்தத்தினால் தமிழ்மக்களது கல்வி பொருளாதாரம் உயிர்கள் அனைத்து இழந்து தெருவில் நிற்கும் நிலைஏற்பட்டு இருப்பதுடன் பாதிக்கப்பட்ட எமது சமூகத்தினை உச்சநிலைக்குக் கொண்டுவருவதற்கு அனைவரும் முன்னின்று உழைக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பொன் செல்வநாயகம் தெரிவித்தார்
கல்முனைத் தமிழ்ப்பிரிவு பிரதேசசெயலகப்பிரிவில் உள்ள பெரியநீலாவணை சுனாமித் தொடர்மாடியில் வசிக்கும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களது சொந்த நிதியில் வழங்கிவைக்கப்பட்டது.
பெரியநீலாவணையில் வசிக்கும் சமூகத்தொண்டன் கோகுலன் அவர்களது வேண்டுகோளின்பேரில் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்களால் அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு கோகுலன் தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்ஃ
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கல்வி என்பது ஒரு இனத்தினது ஆணிவேராகும் அந்த ஆணிவேர் சரியானமுறையில் இருக்கும்போதுதான் சமூகம் முன்னேற்றமடையும் கடந்த காலயுத்தத்திற்கு முன்பு தமிழ்ச் சமூகம் கல்வியில் மேலோங்கிக் காணப்பட்டனர் இன்று எமது சமூகம் கல்வி மாத்திரமல்ல பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
ஒரு சமூகத்தின் எதிர்கால அடையாளங்களாக சிறுவர்களைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது அவ்வாறான சிறுவர்கள்; கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் நல்லமுறையில் பயன்படுத்தி கல்வியில் முன்னேற வேண்டும்.
கல்விப் பணியாற்றுவபர்கள் மரணிப்பதில்லை அவர்கள் மரணித்தாலும் அவர்களது சேவை மரணிப்பதும் இல்லை, அழிந்து போவதும் இல்லை கல்விப்பணியாளர்களது வரலாறு கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துப்போல் நிலைத்திருக்கும் கல்வியின் மூலம் ஒருவரது அடையாளம் வெளிக்காட்டப்படுகிறது இதனால் எதிர்கால சமூகம் முன்னேற்றம் அடையவேண்டும் அதற்காக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கல்வியில் சாதனை படைக்க பலதியாகங்களைச் செய்யவேண்டும் அப்போதுதான் தமிழ்ச் சமூகம் அறிவுமிக்க அபிவிருத்தி அடைந்த சமூகமாக மாற்றம்பெறும் அப்போதுதான் நாம் இழந்தவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக அமையக்கூடும். என்றார்