நாம் சஹ்ரான் ஆட்கள் : நீ கொலைசெய்யப்படுவாய் என கொலைஅச்சுறுத்தல்!பொலிசில் முறையிட்டுள்ளேன் என்கிறார் காரைதீவு தவிசாளர் ஜெயசிறில்.

முஸ்லிம்களில் மூன்றுவகையானவர்கள் இருக்கின்றனர்.ஒருதொகுதி சமாதானவாதிகள் இரண்டாம் தொகுதியினர் வெறித்தனம்பிடித்தவர்கள் மூன்றாம் தொகுதியினர் சஹ்ரான்போன்றவர்கள். நாம் சஹ்ரான் அணியைச்சேர்ந்தவர்கள் எண்ணி 3மாதத்திற்குள் நீகொலைசெய்யப்படுவாய். வாகனத்தில் குண்டுவைத்து வெடிக்கப்படுவாய் என்றெல்லாம் கொலை அச்சுறுத்தல் விடுத்து எனது முகநூல் உட்பெட்டியினுள் குரல்பதிவை அனுப்புகின்றனர்.
 
தற்பாதுகாப்புக்கருதி குறித்த குரல்பதிவு உள்ளிட்ட சகலஆதாரங்களுடன் சம்மாந்துறைப் பொலிசில் நான் முறையிட்டுள்ளேன்.இரகசியப்பொலிசாரும் விசாரணகைளை ஆரம்பித்துள்ளனர். எனது உயிருக்கு ஏதாவது ஆபத்துநேரிடுமானால் அதற்கான முழுப்பொறுப்பையும் எமது சபையின்உபதவிசாளரும் மற்றும் இருஉறுப்பினர்களும் பொறுப்பேற்கவேண்டும்..
 
இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
 
‘கவ்சோ’ நிறுவன அனுசரணையுடன் -தனியார் மற்றும் பொது சம்பாசணை எனும் தலைப்பில் பிரதேசசபை காரியாலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அஸ்ஸாம் ஜசான் வளவாளராகக்கலந்துகொண்டு வியாபாரசமுகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சவால்கள் பற்றி எடுத்துரைத்தார். ‘கவ்சோ’ நிறுவன பிரிதிநிதி எஸ்.தனுராஜ் கலந்துகொண்டார்.
 
அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் பேசுகையில்:
 
நல்லிணக்கம் சமவாழ்வுகருதி ,இரு இனங்களும் கலந்து வாழ்கின்ற காரைதீவு, அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் பிரதேச சபைகளை தேர்ந்தெடுத்து இத்தகைய செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.
 
ஆனால் இந்த சகவாழ்வு நல்லிணக்கத்திற்கு சவாலாக அரசியல்பிரதிநிதிகளே முன்னிலையில் இருப்பது கவலைக்குரியது. இனங்களிடையே இனவாதக் கருத்துக்களை விதைத்து அதில் அரசியல் லாபம் பெறுபவர்களாகவே அவர்களைக்காண்கிறேன். அதற்கு உதாரணமாக இங்கு நடந்த நான் சம்பந்தப்பட்ட சம்பவத்தைக்குறிப்பிடலாமென விரும்புகிறேன்.
 
அண்மையில் நான் செய்யாத குற்றத்திற்காக அரசியல்சூழ்ச்சி பழிவாங்கல் காரணமாக என்மீது சேறுபூசி வருகின்றார்கள்.நான் என்றும் பெரிதாக மதிக்கின்ற நபிகள் நாயகத்தை றெஜி என்பவர் தனது முகநூலில் அவதூறாக எழுதி எனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.
 
இதுவிடயத்தை மாவடிப்பள்ளியைச்சேர்ந்த ஒரு முஸ்லிம் சகோதரர் என்னிடம் எடுத்துச்சொன்னதும் மறுகணமே அதை நான் நீக்கிவிட்டேன்.
 
இருந்தபோதிலும் அதனை கிறீன்சொட் எடுத்து எமது சபையின் முஸ்லிம்உறுப்பினர்கள் வேண்டுமென்றே ஏனைய முஸ்லிம்சகோதரர்களுக்கு பகிர்ந்து அந்தப்பதிவை நானே இட்;டதாகக்கூறி பொலிசில் முறையிட்டது மாத்திரமில்லாமல் முகநூலிலும் ஊடகங்களிலும் மாறிமாறி பேட்டிகொடுத்து என்மீது சொல்லொணா குற்றத்தைச் சுமத்தினர். அதற்கு ஒருகட்சியின் அமைப்பாளரான ஊடகவியலாளர் ஹூதாவும் எண்ணெய்ஊற்றினார்.
 
உலக முஸ்லிம்களுக்கு என்னை ஒரு இனவாதியாக சித்தரிப்பது மட்டுமல்ல அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதே அவர்களது நோக்கமாகவிருந்தது. அவர்களது அரசியல் இலக்கை அடைவதற்கும்  என்னைப்பழிவாங்குவதற்கும்  பயன்படுத்தினார்கள்.
 
உண்மையில் அப்படி நபிகள்மீது நான் அவதூறாக எழுதியிருந்தால் எனது முகநூலிலுள்ள 10முஸ்லிம் சகோதரர்களே பார்த்திருப்பர். ஆனால் இவர்கள் உள்ளிட்ட சில வெறித்தனம்பிடித்தபலர் அதேபதிவை சுமார் 5லட்சம் முஸ்லிம்மக்களுக்கு பகிர்ந்துள்ளனர். அப்படிப்பார்த்தால் நான் செய்தது ஒரு பகிர்வு என்றால் அவர்கள் செய்த பகிர்வு 5லட்சம். எனவே இதில் யார் குற்றவாளிகள் என்பதை நிதானமான முஸ்லிம்சகோதரர்கள் அறிவார்கள்.
உண்மையில் அப்படி நான்தான் அந்தப்பதிவை செய்தேன் என்று வைத்துக்கொள்வோம். இந்த சக முஸ்லிம் உறுப்பினர்கள் என்ன செய்திருக்கவேண்டும்? என்னிடம் தொடர்புகொண்டு இதுவிடயம் குறித்து பேசியிருக்கலாம்.
 
 அல்லது மதத்தலைவர்களை அழைத்து ஒரேமேசையில் இதுவிடயம் குறித்து விளக்கமெடுத்திருக்கலாம்.அல்லது பள்ளிவாசல் ,ஆல ய சம்மேளனத்தை வரவழைத்து கலந்துரையாடியிருக்கலாம். தெளிவு பெறப்பட்டிருக்கும்.
 
இதையெல்லாம்விடுத்து எடுத்தஎடுப்பிலேயே என்மீதுகொண்ட அரசியல்காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும்உணர்வுடன் என்மீது தாறுமாறாக சேறுபூச ஆரம்பித்தனர். சற்றும் அறிவுக்கு இடம்கொடுக்காமல் தீர விசாரிக்காமல் பொலிசில்சென்று முறையிட்டனர். ஊடகங்களுக்கு அறிக்கைவிட்டனர். ஏனையோரையும் தூண்டி வசைபாடவைத்தனர். முகநூல்களிலும் வாட்ஸ்அப்பிலும் எனது உட்பெட்டியிலும் நூற்றுக்கணக்கான பதிவுகளை மிகமோசமான தூசணவார்த்தைகளுடன் பதிவிட்டனர். மிகமோசமான குரல்பதிவையும் பலர் அனுப்பியிருந்தனர்.
 
அதிலொன்றுதான் ‘நாம் சஹ்ரான் அணியினர் உன்னைக்கொல்வோம்’ என்ற குரல்பதிவு.  அதனை தற்பாதுகாப்பிற்காக பொலிசில் முறையிட்டுள்ளேன்.
‘எய்தவனிருக்க அம்பை நோவது சரியா? ‘ நபிகள் தூற்றிய பதிவை ஏற்றியவர் றெஜி என்பவர் என்று  துல்லியமாகத்தெரிகிறது. ஆக எனது முகநூலில் அதனை பகிர்வுசெய்துள்ளார்களே தவிர அப்பதிவுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.இதையிட்டு பள்ளிவாசலில் மட்டுமல்ல ஜ.நா.சபையிலென்றாலும் விளக்கமளிக்கதயாராகவுள்ளேன்.
 
இதுவிடயத்தை பள்ளிவாசல் தலைவர்கள் பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகள் என்னிடம்கேட்டபோது நடந்ததை விலாவாரியாக ஆதாரத்துடன் எடுத்துக் கூறினேன். அவர்கள் ஏற்றுக்கொண்டு இனிமேல் தேவையில்லாமல் யாரும் வசைபாடும் பதிவை தவிசாளர்மீதோ அந்த சமுகத்தின்மீதோ பதிவிடவேண்டாம் நாம் சட்டரீதியாக அதனை எதிர்கொள்வோம் எனக்கூறினர்.
 
அது நியாயம். இதனைத்தான் மதத்தலைவர்கள் செய்யவேண்டும்.இனமுரண்பாடுகளைத் தவிர்ப்பதென்றால் இப்படியாக செயற்படணேடும்.
 
சிலர் நான் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரவேண்டும், பதவியை இராஜினாமா செய்யவேண்டும், முஸ்லிம்உறுப்பினர்கள் எனக்கு ஆதரவளிக்கக்கூடாது, கட்சிஎன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், தவிசாளர் கதிரை பறக்கும் என்றெல்லாம் அறிக்கைவிட்டார்கள்.  முஸ்லிம் கட்சிகளால் செல்லாக்காசாக தூக்கிவிசப்பட்டவர்கள் சிலரும் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.
 
நான் எதற்கும் அஞ்சவில்லை.எதுவும் நிரந்தரமல்ல.  செய்யாத குற்றத்திற்காக மன்னிப்பு கேட்பதை யாரும் அனுமதிப்பார்களா?
 
முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லா தான் ஏறாவூர் ஆலயத்தை உடைத்து பள்ளிவாசல் கட்டியதாக பகிரங்கமாக காணொளி மூலமாகச் சொன்னதை உலகமே அறியும். இந்த இடத்தில் இந்துமத தலைவர்களோ, தமிழ்த்தலைவர்களோ அவரை மன்னிப்புக்கேட்கவேண்டும் என்றோ பதவியை இராஜினாமாச்செய்யவேண்டும் என்றோ கேட்கவில்லை.
 
ஆனால் ,நான் நான்செய்யாத குற்றத்திற்காக ஏன் மன்னிப்புக்கேட்கவேண்டும்? யாரோ இட்ட பதிவுக்காக நான் மன்னிப்புகேட்டால் குற்றம் செய்ததாக பொருள்படும்.
உண்மையில் இதற்கு நடவடிக்கை எடுப்பதென்றால் இப்பதிவை இட்ட றெஜி என்பவரை கைது செய்து விசாரித்து உரியதண்டனை வழங்குங்கள். நானும் பூரண ஒத்துழைப்பைத்தருகிறேன்.
 
தற்போது இதனை தவறாக விளங்கிக் கொண்ட முஸ்லிம்சகோதரர்கள் உண்மையஅறிந்து என்னுடன் சரளமாகப்பேசி வருகின்றார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு இனவாத விதையை விதைத்து இனவன்மத்தை தூண்டிய எமது சபை முஸ்லிம் உறுப்பினர்கள் சிலர் தமது சமுகத்தின்முன் செல்லாக்காசாகி கூனிக்குறுகிநிற்கின்ற நிலை உருவாகியுள்ளது. எந்த சமயமானாலும் இறைவன் பெரியவன். உண்மை உறங்காது.
 
இனியாவது இனநல்லிணக்கம் சகவாழ்வு சமாதானம்என்ற நாமத்தோடு உலாவரும் அமைப்புகள் இப்படியான சந்தர்ப்பத்தில் உடனடியாக தலையிட்டு உண்மை பொய்யை அறிந்து மக்களுக்கு சரியான  உண்மைத்தன்மையை எடுத்தியம்ப வேண்டும் . இன முறுகலை, இன வன்மத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related posts