ஆசிரியர்களது கோரிக்கைகளுக்கு அரசு ஆதரவு; எனினும் உடனடியாக நிறைவேற்றுவதில் பாரிய சிரமம்

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுப்பது சாத்தியமில்லை என்பதை ஆசிரியர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி முறையான தீர்வொன்றை எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
 
ஆசிரியர்களுக்கு நிவாரணம் அல்லது சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் வகையில் ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானதல்ல. அடுத்தாண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் இவர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.
 
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தியின்உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

Related posts