கே.கிலசன்
நாவிதன்வெளி பிரதேசத்தில் முதலாவது வங்கியை நிறுவி அதில் முதலாவது பணம் மீளப்பெறல் பணம் அனுப்புதலுக்கான இயந்திர சேவையையும் (ATM) இலங்கை வங்கி இன்று (28) வியாழக்கிழமை திறந்து வைத்தது.
இலங்கை வங்கியின் நாவிதன்வெளி கிளை முகாமையாளர் கே.சசிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் இலங்கை வங்கியின் பிராந்திய முகாமையாளர் டி.எம்.எஸ்.திஸாநாயக்கவேப்பையடி கலைமகள் வித்தியாலய அதிபர் எஸ்.பாலசிங்கம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்ததோடு பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களால் ATM சேவை திறந்து வைக்கப்பட்டது.
இன்றிலிருந்து நாவிதன்வெளி அன்னமலை 7ம் கிராமம் 15ம் கிராமம் மற்றும் அயற்கிராம மக்கள் 24 மணி நேரமும் தமக்கு தேவையான பணத்தை அனுப்புவதற்கோ மீளப்பெறுவதற்கோ தூரம் செல்ல வேண்டியதில்லை. உங்கள் சேவைகளை உங்கள் ஊரிலேயே பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை இலங்கை வங்கி உங்களுக்கு வழங்கியுள்ளது.
தமது தேவைகளுக்கான பண மீளப்பெறல் பணவைப்பு மற்றும் நகை அடகு வைத்தலுக்காக இப்பகுதி மக்கள் கல்முனைக்கு செல்லவேண்டியிருந்தது. போக்குவரத்து கஷ்டங்களுக்கு மத்தியில் வங்கி சேவைக்காக நாள் முழுவதையும் செலவழிக்க வேண்டியிருந்த பொதுமக்களுக்கு இலங்கை வங்கி தமது சேவையை 2012 இல் நாவிதன்வெளியிலேயே ஆரம்பித்தது. இது மக்களின் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்த போதிலும் வங்கி நேரம் தவிர்ந்து அவசர தேவைகளுக்கான பணம் மீளப்பெறவோ பணம் வைப்பிலிடுவதற்கோ கல்முனையை நோக்கி செல்லவேண்டியிருந்தது. அதனையும் இலகுபடுத்தி 24 மணிநேரமும் பண மீளப்பெறல் மற்றும் வைப்பிலிடுவதற்கான ATM சேவையினை 7 வருடங்களில் இன்றைய தினம் ஆரம்பித்து வைத்துள்ளது.