நீதிமன்றம் கலையரசன் எம்.பி.உள்ளிட்ட 9பேருக்கு தடையுத்தரவு!லண்டன் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக நடைபவனியாம்.!

லண்டன் அம்பிகா செல்வகுமார் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும்வகையில் அம்பாறை மாவட்டத்தில் உண்ணாவிரதத்தையும் பேரணியையும் நடாத்தலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நேற்று(3) புதன்கிழமை முதல் ஒன்பது பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
த.தேகூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் த.கலையரசன் திருக்கோவில் பிரதேசசபைத்தவிசாளர் வில்சன் கமலராஜன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பொத்துவில் பிரதேசசபை உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபன் பொத்துவிலல் பிரதேசசபை உறுப்பினர் சுபோ கல்முனைமாநகரசபைஉறுப்பினர் ராஜன் மற்றும் தர்சன் கல்முனை தா.பிரதீபன் திருக்கோவில் செல்வராணி ஆகிய 9பேருக்கும் எதிராக இத்தடையுத்தரவுப்பத்திரம் நேற்று(3) பொலிசாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
பொத்துவில் நீதிவான் நீதிமன்றம் இந்த 9பேருக்கும் நேற்று3ஆம் திகதி  தொடக்கம் எதிர்வரும் 07ஆம் திகதி வரை  இந்தத்தடையுத்தரவைப்  பிறப்பித்துள்ளது. இக்காலப்பகுதியில் மக்களை ஒன்றுதிரட்டி நடைபவனி மேற்கொள்ள இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
பொத்துவில் பொலிஸ்பிரிவிலிருந்து மக்களை ஒன்றுதிரட்டி திருக்கோவில் காரைதீவு கல்முனை வரை பிரதான வீதியூடாகவும் நகரங்களிலும் உண்ணாவிரதமும்நடைபவனியும்  நடாத்துவதற்கு குறித்த 9நபர்களால் ஆயத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றிற்கு நேற்று(3) அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
 
குறித்தகாலப்பகுதியில் மக்களை ஒன்றுதிரட்டி பேரணி நடாத்த ஏற்பாடுசெய்வது  கொரோனா நோய் பரவுதலை அதிகரிக்கும் என்பதால் 1979ஆம்ஆண்டின் 15ஆம் இலக்ககுற்றவியல் சட்டத்தின்படி தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதாகநீதிவான் இந்தத்தடையுத்தரவைப்பிறப்பித்துள்ளார்.
 
குறித்த எதிர்ப்புநடவடிக்கைகளை மேற்கொள்ளும் குழுக்களை விலக்குவதற்காக திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு கட்டளையிடப்படுவதாகவும் அத்தடையுத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts