நுண் கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் சில இன்று முன்னெடுக்கப்பட்டன.
கிராம மட்டங்களில் பெண்களை இலக்கு வைத்து அதிக வட்டிக்கு நுண் கடன் நிதி நிறுவனங்கள் கடன்களை வழங்குவதால் தற்கொலைகளும் குடும்பத்தகராறுகளும் ஏற்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடை வீதி வழியாக வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்தனர்.
இதன்போது, வட மாகாண ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபரிடம் கையளிப்பதற்கான மகஜரை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தினை பொது அமைப்புகள் சில இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதேவேளை, நுண் நிதிக் கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த கவனயீர்ப்புப் பேரணியை பெண்கள் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
முல்லைத்தீவு சுனாமி நினைவாலய முன்றலில் இருந்து மாவட்ட செயலகம் வரை பேரணியாகச் சென்று, மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவினைக் கையளித்தனர்.
கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டவர்களை ஒரு நுண் நிதி நிறுவனத்தின் முகாமையாளரும் ஊழியர்களும் கையடக்கத் தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்ததாக தெரிவித்தார்.
இதேவேளை, நுண் கடன் திட்டத்திற்கு மாற்றுத் திட்டத்தினை அறிமுகப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி – கரடிபோக்கு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததை அடுத்து கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாவட்ட செயலகம் ஊடாக மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜர், மாவட்ட செயலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
நுண் நிதி கடன் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரிலும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புகள் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தன.
மன்னார் மாவட்ட செயலக பிரதம கணக்காளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.