தற்போது 40, 45 வயதுகளைக் கடந்த நிலையிலும் பட்டச் சான்றிதழ்களைப் பெற்றும் பயனில்லை என்ற நிலையில் பட்டதாரிகள் விரக்தியடைந்துள்ளனர். இவர்களுக்கு அரசாங்கம் என்ன பதில் அளிக்கப் போகின்றது அத்துடன் அமைச்சுப் பதவிகளையோ, சலுகைகளையோ, சன்மானங்களையோ எதிர்பார்க்காமல் ஜனநாயகத்திற்கு புத்துயிர் அளித்தமைக்கு ஈடாக எமது இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகள், பிரதேசத்தின் அபிவிருத்தி, என்பவற்றில் அரசு கூடுதல் கரிசனை செலுத்துவதோடு, முக்கியமாக அரசியல் தீர்வு விடயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
(29) இடம்பெற்ற பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாத ஒத்திவைப்புப் பிரேரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வேலைவாய்ப்பற்ற நிலையில் நாடு பூராகவும் பல பட்டதாரிகள் காணப்படுகின்றனர். 2012 ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் தமது பட்டப் படிப்பினை நிறைவு செய்த பலர் தொழில் வாய்ப்புக்களுக்காக ஏங்கிக் கிடக்கின்றனர், போராடுகின்றனர்.
இப்படியான நிலையில், பட்டதாரிப் பயிலுனர்களைத் தேர்தெடுப்பதற்காக மாவட்ட செயலகங்களில் நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்பட்டன. நேர்முகப் பரீட்சையில் உள்வாரி, வெளிவாரிப் பட்டதாரிகள் பலர் தோற்றினர். தோற்றும் போது நேர்முகப் பரீட்சையில் கணிசமான மதிப்பெண்களைப் பெற்றால் உள்வாரி, வெளிவாரி என்ற பேதங்கள் இல்லாமல் புள்ளிகள் அடிப்படையில் பணிக்கு நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பும் நியாயமாகவே இருந்தது.
நேர்முகப் பரீட்சையின் பின்னர், உள்வாரிப் பட்டதாரிகளில் இருந்து பட்டதாரிப் பயிலுனர்கள் நியமிக்கப்பட்டனர். வெளிவாரிப் பட்டதாரிகள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால், நேர்முகப் பரீட்சையில் தம் ஆற்றல், திறமைகளை வெளிப்படுத்திய வெளிவாரிப் பட்டதாரிகள் அனைவரும் வேதனையின் விளிம்பில் உள்ளனர். இதனால், அவர்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளனர்.
வடக்கு கிழக்குப் பட்டதாரிகள் 100 நாட்களுக்கு மேலாக இரவு பகலாக தொழில் வாய்ப்புகளுக்காகப் போராடியிருந்தனர். அதன்போது அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் நேரடியாக வந்து திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் பட்டதாரிளுடன் உரையாடியதுடன், அரசாங்கத்தின் சார்பாக தொழில் வாய்ப்புக்கான உத்தரவாதம் அளித்தனர்.
தற்போது 40, 45 வயதுகளைக் கடந்த நிலையிலும் பட்டதாரிகள் பட்டச் சான்றிதழ்களைப் பெற்றும் பயனில்லை என்ற நிலையில் விரக்தியடைந்துள்ளனர். இவர்களுக்கு அரசாங்கம் என்ன பதில் அளிக்கப் போகின்றது.
10 லட்சம் பேருக்குத் தொழில் வாய்ப்புக்களை வழங்கவுள்ளதாகப் பிரதம மந்திரி ஏற்கனவே கூறியுள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்பகின்றேன். தயவு செய்து இவ்விடயத்தில் சாதகமான பதிலையும், செயற்பாடுகளையும் எதிர்பாக்கின்றேன்.
பட்டதாரிகளின் நியமனங்கள் மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர் நியமனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அறிகின்றேன். இதுபற்றி கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிடும் போது 811 தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடைபெற இருப்பதாகக் குறிப்பிட்டார். ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் இந்த நேர்முகப் பரீட்சை நடைபெற்று முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் மத்திய கல்வி அமைச்சில் தான் இந்த நேர்முகப் பரீட்சை நடைபெற இருக்கின்றது என அறிகின்றேன்.
மேலும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. அதனைத் துரிதப்படுத்தியாக வேண்டும். அதுமட்டுமல்லாமல் சிற்றூழியர் நியமனங்களின் போது நியாயமான செயற்பாடுகள் கடந்த காலத்திலும் நடைபெறவில்லை. இக்காலத்திலும் கூட சில குறைபாடுகளை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர் நியமனங்களின் போது கடந்த ஆட்சிக் காலத்தில் பொலனறுவை மாவட்டத்தில் இருந்து 129க்கும் மேற்பட்டவர்களும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 84க்கு மேற்பட்டவர்களும், பதுளை மாவட்டத்தில் இருந்து 11க்கும் மேற்பட்டவர்களும் சிற்றூழியர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது சொந்த மாவட்டத்திலுள்ளவர்களுக்கான தொழில்வாய்ப்பினை அபகரித்துக் கொள்வது போல் அமைந்துள்ளது.
இப்போதைய சுகாதார அமைச்சு கடந்த ஆட்சியின் போது ஏற்பட்ட தவறுகளை விடாமல் தவிர்த்து சொந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்புக்களை இனிவரும் நியமனங்களின் போது வழங்க வேண்டும்.
அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பதன் மூலமாகவும், அரச நிறுவனங்களில் புதிய ஆளணி நிரலை புதுப்பிப்பதன் மூலமாகவும், தனியார் துறைகளை விஸ்தரிப்பதன் மூலமாகவும் தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
அதேவேளை நாடாளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட அரசியல் சதியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயலாபங்களை அடிப்படையாகக் கொண்ட அமைச்சுப் பதவிகளையோ, அல்லது வேறு சலுகைகள், சன்மானங்களையோ எதிர்பார்க்காமல் ஜனநாயகத்திற்கு புத்துயிர் அளிப்பது போன்று செயற்பட்டு ஜனநாயக ஆர்வலர்கள் மத்தியிலும், உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் நல்லபிப்பிராயத்தைப் பெற்றிருந்தது.
எனவே நாங்கள் செய்த நல்ல கைங்கரியத்திற்கு ஈடாக எமது பிரதேசத்தின் அபிவிருத்தி, இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகள் என்பவற்றில் அரசு கூடுதலான கரிசனை செலுத்த வேண்டும். அத்தோடு முக்கியமாக அரசியல் தீர்வு விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்று தனது பிரேணையைச் சமர்ப்பித்தார்.
இவ் ஒத்திவைப்புப் பிரேரணை தொடர்பில் பிரதமர் சார்பாக அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்கள் பதிலளிக்கையில்,
உள்வாரிப் பட்டதாரிகள் மாத்திரமல்லமால் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கும் எதிர்காலத்தில் தொழில்வாய்ப்புகளை வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்டார். அதேவேனை தனியார் துறைகளை விஸ்தரித்தல், சுற்றுலாத்துறையினை விஸ்தரித்தல் போன்றவற்றினூடாகவும் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்தோடு 40, 45 வயதுகளைத் தாண்டிய பட்டதாரிகளுக்கும் அவர்களது இயலுமையைக் கருத்திற்கொண்டு உரியவாறான வாய்ப்புக்களை அளிக்கவுள்ளதாகவும் பதிலுரைத்ததுடன் இருக்கின்ற காலத்தில் பல விடயங்களைக் கையாளவுள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.