மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் காளிகோயில் வீதியானது சுமார் 12வருடங்களாக எதுவித புனரமைப்பு வேலைகளுமின்றி குன்றும்,குழியுமாக காணப்படுவதாக பொதுமக்கள்,பாதசாரிகள்,கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
இவ்வீதியானது ஓந்தாச்சிமடம் பிரதானவீதி சந்தியிலிருந்து வடக்குப்பக்கமாக சுமார் 1500 மீற்றர் நீளமுடையதாக காணப்படுகின்றது. இவ்வீதியானது சுமார் 12வருடங்களாக மீள்புனரமைப்பு வேலைகள் செய்யாத காரணத்தினால் வீதியில் பாரிய குன்றுகளும்,குழிகளுமாக காணப்பட்டு தற்போது பெய்கின்ற அடைமழை காரணமாக குழிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள்,பாதசாரிகள் போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் அல்லல் படுகின்றார்கள்.வீதியில் மழைநீர் தேங்கியிருப்பதால் நுளம்புகள் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது.நுளம்புகளின் உருவாக்கத்தினால் சிறுவர்கள்,வயோதிபர்கள்,குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.இக்கிராமத்தில் உள்ள சமூக நிறுவனங்கள் எழுத்துமூலம் வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை முன்வைத்தும் அலட்சியப்போக்கை உயர் அதிகாரிகள் கடைப்பிடிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான தார்வீதியானது இக்கிராமத்தில் உள்ள 2600 குடும்பங்களைச் சேர்ந்த 10500 பொதுமக்கள் நாளாந்தம். பயன்படுத்தி வருகின்றார்கள்.இவ்வீதியில் பிரசித்தி பெற்ற ஓந்தாச்சிமடம் வடபத்திரகாளியம்மன் ஆலயம் இருப்பதால் ஆலயதரிசனத்துக்கு செல்லும் அடியார்கள்,பக்தர்கள் மிகுந்த அசௌரியங்களுக்கு உட்படுத்தப்பட்டு வவருவதாக பொதுமக்கள் ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.
இவ்விவீதியின் அவநிலையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்,வீதி அபிவிருத்தி அதிகாரசபை மாவட்ட பொறியியலாளர்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் போன்றோர்கள் துரித கவனமெடுக்க வேண்டும் என ஓந்தாச்சிமடம் கிராம மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.