பரீட்சைகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலும், கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கும் இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, தரம் 10 மற்றும் 11ஆம் தரங்களின் பாடவிதானங்கள் ஒரு வருடமும் ஒன்பது மாத காலப்பகுதிக்கு ஏற்றவாறு மீள்கட்டமைப்படவுள்ளது.

அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கு அமைய, ஒவ்வொரு பரீட்சைகளின் பெறுபேறுகளும் 03 மாதத்திற்குள் வெளியிடப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த செயன்முறைக்காக தற்போது எடுக்கப்படுகின்ற 45 மாத காலத்தை 32 மாதங்களாகக் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான தொழிநுட்ப ரீதியான ஏற்பாடுகளை தயாரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள் பரிசீலனை செய்யும் செயன்முறை மூலம் பெறுபேறு அதிகரிக்கின்ற மாணவர்கள் இருப்பின் அவர்களுக்கான புதிய Z வெட்டுப்புள்ளி வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன் ஊடாக குறித்த பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதோடு, குறித்த பொறிமுறையை 2020 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts