நூறுல் ஹுதா உமர்
முஸ்லிம் மக்களை ஏமாற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய காலம் தற்போது மாற்றமடைந்து விட்டது. பலமான தலைமையிலான ஆட்சியினை ஏற்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் இன, மத பேதமின்றி முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.
அநுராதபுர நகரில் நேற்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் கன்னி கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சியை கைப்பற்றினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கத்தின் நிர்வாகத்தில் தமிழ் – முஸ்லிம் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். ஒரு கட்டத்தில் முஸ்லிம் மக்களின் வாழ்க்கை பாரிய அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது.
போலியான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியினை கைப்பற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் போலியான வாக்குறுதிகளை வழங்க ஆரம்பித்து விட்டார்.
இம்முறை முஸ்லிம் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முடியாது. பலமான தலைமைத்துவத்திலான அரசாங்கத்தை உருவாக்க இன்று நாட்டு மக்கள் இன, மத பேதமின்றி ஒன்றுப்பட்டு உள்ளார்கள்.
பாரிய போராட்டத்தின் மத்தியிலே அனைத்து இனங்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டது. தேசிய பாதகாப்பினை நல்லாட்சி அரசாங்கம் பலவீனப்படுத்தி பாரிய அச்சுறுத்தலினை ஏற்படுத்தியது. நாடு எதிர்க் கொண்டுள்ள பின்னடைவில் இருந்து மீள வேண்டும் அதற்காக அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்றார்.