யானைகளின் அட்டகாசத்தால் கடை சேதம்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

நிந்தவுர் விவசாய விஸ்தரிப்பு பிரிவிற்குட்பட்ட  வீரக்காடு போத்திலாந்து காலைக்கு அருகிலுள்ள தேனீர்கடையை நேற்றிரவு கூட்டமாக வந்த காட்டு யானைகள் நள்ளிரவில் தாக்கிச் சென்றுள்ளன.

தற்போது  இப்பிரதேசத்தில் பெரும் போகத்திற்கான விதைப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் , வெளியுரில் இருந்து வந்து விதைப்பு வேலைகளில் ஈடுபட்ட விவசாயிகள் 5 பேர் இந்த கடையில் தாக்குதல் இடம்பெற்ற வேளையில் உறக்கத்தில் இருந்துள்ளனர்.

சுவரை உடைக்கும் சத்தம் கேட்டதும் கடையின் பின்புறமாகவுள்ள ஜன்னல் வழியாக  வயல் பக்க மாக தப்பியோடி தமது உயிரை காப்பாற்றிக் கொண்டாக விவசாயிகள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

சிறுபோக வேளாண்மை அறுவடை நிறைவடைந்த  பின்னர் காட்டுப்புறமாக காணப்பட்ட காட்டு யானைகள் அண்மைக்காலமாக வயல் வழியாக வந்து சம்மாந்துறை , நிந்தவுர் , மாவடிப்பள்ளி போன்ற இடங்களில் பொதுமக்களின் உடமைகளுக்கும் பயிர்களுக்கும் பலத்த சேதத்தை உண்டுபண்ணியிருந்தது.

வன இலாகா அதிகாரிகளினால் இவ் வயல் பிரதேசத்தில் அங்குமிங்கும் உலவித்திருந்த காட்டு யாகைள் காட்டுப் பகுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை விவசாயிகள் மத்தியில் பெரும் விசனத்தையும் அச்சத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts