அம்பாறையையடுத்துள்ள புதியவளத்தாப்பிட்டி எனும் கிராமத்தையண்டிய ஆண்டிரகனத்தை எனும் பிரதேசத்தை தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் எல்லைவேலியிட வந்தபோது பொதுமக்களுக்கும் உத்தியோகத்தர்களுக்குமிடையே முறுகல்நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மக்கள் செறிந்துவாழும் புதியவளத்தாப்பிட்டிக் கிராமத்திற்கு பின்புறமாக இந்த ஆண்டிரகனத்தை எனும் தரிசுநிலப்பகுதியுள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களுக்குச்சொந்தமான அப்பகுதியை தொல்பொருள் எச்சங்கள் உள்ள பிரதேசம் என்றுகூறி பாதுகாப்பு எல்லைவேலியிட உத்தியோகத்தர்கள் வந்தவேளை இம்முறுகல் நிலையேற்பட்டது.
சுமார் 400மீற்றர் சுற்றளவுள்ள பரப்பைச் சுற்றி எல்லைவேலியிட அன்று காலை வந்தவர்கள் பிற்பகல் வரை அடையாளத்திற்கான சிறுகட்டைகளை (கூனி) வரை நட்டுக்கொண்டிருந்தனர்.
இத்தகவல் அறியக்கிடைத்ததும் அங்கு ஸ்தலத்திற்கு விரைந்த சம்மாந்துறைப் பிரதேசசபை உப தவிசாளரும் அக்கிராமத்தைச்சேர்ந்த சமுகசேவையாளருமான வெள்ளி ஜெயச்சந்திரன் தொல்பொருள் உத்தியோகத்தர்களோடு கலந்துரையாடினார்.
உபதவிசாளர் ஜெயச்சந்திரன் அங்கு எல்லையிட வந்த உத்தியோகத்தர்களிடம் கூறுகையில்:
எங்களுக்கென்று இலங்கையில் உள்ள ஒரே பிரதேசம் இது ஒன்றுதான். அதனையும் நீங்கள் உங்கள் பிரதேசம் என்று எடுத்தால் நாம் கடலில் பாய்வதைவிட வேறு வழியில்லை. நாங்கள் ஏழைகள்.
அதுமட்டுமல்ல இந்த பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்களுடைய காணிகள் உள்ளன. அவர்கள் ஏழைகள். எனவே தயவுசெய்து எல்லையிடுவதை நிறுத்துங்கள்.
தொல்பொருள் எச்சங்கள் உள்ளது என்றுகூறி இவ்வளவு பெரிய பிரதேசத்தை ஆக்கிரமிப்பதென்பது எமது தமிழ்முஸ்லிம் மக்களுக்கு பாரிய பாதிப்பாக வந்துசேரும்.
நாமறிந்தவரை அப்பகுதிகளில் தொல்பொருள் எச்சங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படித்தான் என்றால் அந்தப்பகுதியை மட்டும் எல்லையிடுவதில் தவறில்லை. அதை விடுத்து இப்பாரிய பரப்பைச்சுற்றி எல்லையிட்டால்நாம் எதிர்காலத்தில் எங்கு வாழ்வது? சற்று சிந்தியுங்கள்.
தேவையானால் அரச அதிபர் மற்றும் தொல்பொருள் திணைக்கள உயரதிகாரிகளோடு பேசுவோம். நானும்வருகிறேன். அதுவரை தயவுசெய்து தற்காலிகமாக நிறுத்துங்கள் எனஅன்பாகக்கூறினார்.
அவரது கருத்துக்கு மதிப்பளித்து எல்லையிடும் பணியை தற்காலிகமாக நிறுத்திச்சென்றுள்ளனர். மக்களும் அமைதியடைந்தனர். மீண்டும் வந்தால் ஆர்ப்பாட்டம் நடாத்தத்தயங்கமாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.