புதிய ஆளுநரின் பங்கேற்புடன் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!!



 
மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டின் மே மாதத்திற்கான அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (01) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் அவர்களது பங்கேற்புடன் இடம்பெற்ற
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்,
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன் மற்றும் இரா.சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் இம்மாவட்டத்தின் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் உடன் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளை பணித்துள்ளார்.

குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிக்குழுவினர் உள்ளிட்ட உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க (காணி) திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள், மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது விசேடமாக தேசிய ரீதியில் கிழக்கு மாகாணம் டெங்கு தொடர்பில் முதலிடம் வகித்து வருவதனையிட்டு அதனை கட்டுப்படுத்துவதற்கான குழுவொன்றினை ஆளுநர் நியமித்ததுடன், மிக விரைவாக மாகாணத்தில் இருந்து டெங்கை இல்லாதொழிக்க அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டுமென அதிகாரிகளிடம் வேண்டுகோள்  விடுத்திருந்தார்.

அத்தோடு மாவட்டத்தின் மேச்சற்தரை மற்றும் மகாவலி  தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றினை எதிர்வரும் 26 ஆந் திகதி நிகழ்த்துவதாகவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
 

Related posts