ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று பிற்பகல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இந்த மாநாட்டில், அக்கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
அதனைத் தொடர்ந்து, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.
இந்த மாநாட்டில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.