புதிய அரசாங்கம் நல்ல சூழலை ஏற்படுத்தும் போது தமிழர் நலன்சார்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் எனும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காமல் நாங்கள் வெளியேறினோம். ஆனால் நடந்ததோ வேறு என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்துவரும் கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இன்று (07) நடைபெற்ற பொது நூலக திறப்பு விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் மக்கள் நலன்சார்ந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தலாம் எனும் நம்பிக்கையில் நாம் செயற்பட்டோம். ஆனாலும் அந்நிலைமாறி தற்போது எமது ஆலயங்கள் சுவிகரீக்கப்படுகின்றன. இந்த நிலை மாறவேண்டும்.
நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல. இந்த நாட்டிலே அனைத்து இனங்களோடும் இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள். இந்நிலையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை எனும் ஜனநாயக ரீதியான எழுச்சி பேரணியை பல அடக்குமுறைகளை கொண்டு அவர்களே தடுக்க முயன்றனர். அப்போதும் நாங்கள் வன்முறையை கையாளவில்லை. இந்த நாட்டிலே ஜனநாயகம் நிலை நிறுத்தப்படவேண்டும் சமாதானம் உருவாக்கப்படவேண்டும் என பாடுபடுகின்றோம் என்றார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்கின்றனர் சிலர். எங்களது மக்கள் எங்களது மண்ணில் வாழ வேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கின்றோம். மாறாக நாங்கள் தனிமனிதராக வாழ வேண்டும் என்றால் வாழ்ந்து சென்றிருக்கலாம். இதனை மறந்து சிலர் வேறு திசையில் செல்கின்றனர். இதனை நீங்கள் நிறுத்த வேண்டும். இல்லையேல் 22 உறுப்பினர் 10 ஆனது போல் எதிர்காலத்தில் தமிழர்களுக்கு குரல் கொடுக்க பாராளுமன்றத்தில் யாரும் இருக்கமாட்டார்கள்.
ஒரு நூல் நிலையம் திறக்கப்பட்டால் ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படும் என்றனர். ஆனால்; தமிழர்களுக்கு இந்த நாட்டிலே அவ்வாறு இல்லை. 1981ஆம் ஆண்டு 97000 அயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருந்த யாழ் நூல்நிலையம் ஏன் திட்டமிட்டு எரிக்கப்பட்டது என்பதை நினைத்து பாருங்கள். அதிகமாக படித்த சமூகம் யாழ்ப்பாணத்தில் இருந்தமையே காரணம் என்றார்.
லண்டன் வோல்தம்ஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதிப் பங்களிப்புடன் நிர்மானிக்கப்பட்டு கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.கமலமோகனதாசன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் கௌரவ அதிதியாக அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் லண்டன் அகிலன் பவுண்டேசன் இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வானது அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்புடன்; மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவழிபாட்டுடன் ஆரம்பமானது. இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச செயலாளர் இணைந்து நூல் நிலையத்தின் பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தனர். தொடர்ந்து நூல் நிலையத்தை அதிதிகள் இணைந்து நாடாவை வெட்டி திறந்து வைத்து நூல்களை பார்வையிட்டனர்.
பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை வரவேற்பு நடனம் ஊடாக மாணவர்கள் வரவேற்றனர். இதன் பின்னராக கலந்து வரவேற்பு தலைமையுரை உள்ளிட்ட அதிதிகளின் உரையும் இடம்பெற்றது.
இறுதியாக பாடாசலை மாணவன் ஒருவருக்கும் கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தினரால் துவிச்சக்கரவண்டி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் நலன்சார்ந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தலாம் எனும் நம்பிக்கையில் நாம் செயற்பட்டோம்
சந்திரன் குமணன்
அம்பாறை.