மக்கள் புறக்கணிக்கும் பட்சத்தில், மக்கள் பிரதிநிதிகள் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயாராகவே இருக்க வேண்டுமென அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாஸ மேலும் கூறியுள்ளதாவது,
“ஜனநாயக ரீதியாக நாம் அனைவரும் மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும்.
மக்கள் எம்மை புறக்கணித்தால் நாம் அரசியலில் இருந்து நிச்சயமாக வெளியேறத் தயாராகவே இருக்க வேண்டும்.
மக்கள் எமக்கு ஆட்சியமைக்கும் தகுதி உள்ளது என்று நினைத்தால் நாம் அரசியலில் தொடர வேண்டும். இங்கு மக்களின் ஆணையே முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
ஆகையால் மக்களின் ஆணையையும் மக்களின் எதிர்ப்பார்ப்பையும் புறக்கணித்து விட்டு, குடும்ப ஆதிக்கத்துக்குள் எடுக்கப்படும் எந்தவொரு முடிவையும் மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. நாமும் இதற்கு என்றும் அனுமதிக்கப்போவதில்லை.
நாம் இந்த இடத்திற்கு, மக்களின் ஆணைக்கு இணங்கவே வந்துள்ளோம். எனவே, நான் இந்த இடத்தில் ஒரு வாக்குறுதியை வழங்குகிறேன்.
இம்முறை எவருக்கும் அரசியல் விளையாட்டில் ஈடுபட நாம் அனுமதிக்கப்போவதில்லை.
மக்களுக்கே முழுமையான அதிகாரம் கிடைக்கும் என்பதையும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.