இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின்கீழ் இயங்கி வரும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் மாவட்டப் பிரிவினால், சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஆலேசனை மற்றும் வழிகாட்டல்கள் பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விசேடமாக அமைக்கப்பட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினை மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் இன்று (09) திறந்துவைத்தார்.
சகல வசதிகளுடன் கூடிய இப்பிரிவினூடாக சிறுதொழில் முயற்சியில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் சட்டவிடயங்கள் மற்றும் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டுபட்டு வருகின்றன. சிறுதொழில், வியாபாரம் ஒன்றை புதிதாக ஆரம்பிக்க எண்ணியுள்ளவர்கள் மற்றும் தொழில் ஒன்றை செய்து வருபவர்களும் இப்பிரிவினூடாக சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இப்பிரிவு திறந்துவைக்கப்பட்டதனூடாக மாவட்ட செயலகத்தில் மாத்திரம் வழங்கப்பட்டு வந்த முயற்சியான்மை அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைகள், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க விடயங்கள், நிதி ஆலோசனைகள், சந்தைப்படுத்தல் தொடர்பான ஆலோசனைகள், வியாபார ஆலோசனைகள், அபிவிருத்தி மற்றும் ஆலோசனை போன்ற 6 பிரிவுகளின் சேவைகள் அனைத்தையும் 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் பொதுமக்கள் இலகுவாக பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறுதொழில் முயற்சிஅபிவிருத்திப் பிரிவு மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் சி. வினோத், உதவிப் பிரதேச செயலாளர்களான கே. அருணன், திருமதி. லக்ஷன்யா பிரசாந், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. பிரணவஜோதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சுதர்சன், கணக்காளர் பீ. புவனேஸ்வரன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.