மட்டக்களப்பு தாக்குதல் மனித குலத்துக்கு எதிரான நாசகார செயல்.சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்படவேண்டும்.மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவிப்பு.

மட்டக்களப்பு தாக்குதல் மனித குலத்துக்கு எதிரான நாசகார செயல்.சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்படவேண்டும்.மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவிப்பு.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதல் மனித குலத்துக்கு எதிரான நாசகாரச் செயலாகும் எனவும்,இவ்வாறான சூத்திரதாரிகளை யாரென்று புலனாய்வாளர்கள்,முப்படையினர் கூட்டாக இணைந்தும்,கண்டுபிடித்தும் பொதுமக்களின் பாதுகாப்பை மட்டக்களப்பில் உறுதிப்படுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இவ்வாறு கண்டனம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் மதவழிபாட்டில் பொதுமக்கள் ஈடுபட்டிக் கொண்டிருந்தபோது அதற்குள் நுழைந்து,மிகவும் நுட்பமாகவும்,தமிழர்களை திட்டமிட்டும்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கண்டனம் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயம் மீதான தாக்குதல் மனிதகுலத்துக்கு எதிரான காட்டுமிராண்டித் தனமான கீழ்த்தரமான  தாக்குதலாகும். இவ்வாறான செயல்கள் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியவை ஆகும்.யாராக இருந்தாலும் சூத்திரதாரிகளை அடையாளப்படுத்தி கொண்டும், பொதுமக்களை பாதுகாப்பது நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பாகும்.

பச்சிளம் பாலகர்கள், வறுமைப்படவர்கள்,முதியோர்கள்,பெண்கள்,பொதுமக்கள் என பாகுபாடின்றி மத ஆராதனையில் ஈடுபட்டுக்கொணடிருக்கின்றபோது இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை மிகவும் வேதனையைத் தந்தும் கவலையளிக்கின்றது.இதனை கடவுளும்கூட மன்னிக்கமாட்டான்.இதனால் மட்டக்களப்பு மாவட்ட எம்மக்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளார்கள்.கவலையுடனும்,கண்ணீருடனும் தாக்குதல் நேற்றையதினத்தை கழித்துள்ளார்கள்.

இவ்வாறான செயற்பாட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் யாராக இருந்தாலும், பாகுபாடின்றி தண்டிக்கப்படவேண்டும். உண்மையான குற்றவாளியை புலனாய்வாளர்கள் இனங்கண்டு கொள்ளவேண்டும்.குற்றமிழைக்காதவர்கள் என்றைக்கும் தண்டிக்கப்படக்கூடாது. குற்றமிழைக்கப்பட்டவர்களை சரியாக இனங்கண்டால்தான் தொடர்ந்தும் இவ்வாறான விளைவுகள் இடம்பெறுவதைத் தடுக்கமுடியும்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆளுநர் தலைமையில் கூடி நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருக்கின்றோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் பேசியிருக்கின்றோம். உயிரிழந்தவர்களின் சடலங்களை சரியானமுறையில் இனங்காணமுடியாமல் உள்ளது.இவ்வாறான நிலையில் தெரிந்தவர்கள்,உறவுகள் அடையாளப்படுத்தி உயிரிழந்துள்ளவர்களின் சடலங்களை அடையாளப்படுத்தி பிரேதங்களை பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில் பொதுமக்கள்,மாணவர்கள்,குழந்தைகள் விழிப்பாக இருக்கவேண்டும்.அனாவசிமான பொதிகளுடன் நடமாடும் சந்தேக நபர்கள் குறித்தும் ;பொது வைபவங்கள்,ஒன்றுகூடல் நிகழ்வுகளில் பங்கேற்கும்போது சந்தேக நபர்கள் சம்பந்தமாக விழிப்புடன் செயற்படுமாறும் பொதுமக்களை அவர் மேலும்  கேட்டுக்கொண்டார்.

Related posts