தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழினத்தின் தோல்வியாகவே கருதப்படும்

(க.விஜயரெத்தினம்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழினத்தின் தோல்வியாகவே கருதப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் வெற்றியை உறுதிசெய்யும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று மாலை தேற்றாத்தீவில் நடைபெற்றது.

தேற்றாத்தீவு பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமாரும் கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கருணாகரம்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 குழுக்கள் ஊடாக 304 வேட்பாளர்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.இதில் பல கட்சிகளும் வேட்பாளர்களும் சுயேச்சை குழுக்களும் பேரினவாத சக்திகளினால் இங்கு இறக்கிவிடப்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும்.தமிழர்களின் வாக்குகளை பிரிக்கவேண்டும்,தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கும் ஆசனங்களை குறைக்கவேண்டும் என்பதற்காகவே இவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் அரசாங்க அதிகாரிகளை மிகவும் கேவலமான முறையில் விமர்சித்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கூட மட்டக்களப்பு மாவட்டத்தில்போட்டியிடுகின்றார் என்றால் அது தொடர்பில் தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும்.பேரினவாதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலவீனப்படுத்தவேண்டும் என்ற ஒரு நோக்குடன் இவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல் குரலாக இருக்கவேண்டும் என்பதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.முன்னர் இயக்கங்களிடையே பல முரண்பாடுகள் இருந்தாலும் கடந்தகால கசப்பான சம்பங்களை மறந்து ஒற்றுமையாக தமிழ் மக்களுக்காக போராடுவோம் என்ற ரீதியில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதன் காரணமாக அகிம்சை ரீதியாக போராடிய இந்த தலைவர்கள் அதில்தோற்றதன் காரணமாக அதில் நம்பிக்கையிழந்து ஆயுதப்போராட்டத்திற்குள் நுழைந்தார்கள்.அந்த ஆயுதப்போராட்டமும் 2009ஆம்ஆண்டுடன் மௌனிக்கப்பட்டது.அன்று தொடக்கம் இன்றுவரையில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக,தமிழ் மக்களின் குரலாக,தமிழ் மக்களுக்கு இன்னல் நேரும்போது அதனை தட்டிக்கேட்கும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே செயற்படுகின்றது.

அண்மையில் ஜனாதிபதியினால் கிழக்கு தொல்பொருள் செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.முன்னாள் இராணுவத்தளபதியின் தலைமையில் முழுக்கமுழுக்க பௌத்த தேரர்களையும் இராணுவ வீரர்களையும்கொண்டதாக இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. பொலநறுவை,அனுராதபுரம் நகரங்கள் ஒரு காலத்தில் இந்து மன்னர்களினால் ஆளப்பட்டது.அந்த அடையாளங்கள் இன்றும் உள்ளன.ஒரு ஜனநாயக நாட்டின் ஜனாதிபதியாக இருந்தால் ஒரு நீதிநியாயமாக செயற்படக்கூடிய ஜனாதிபதியாக இருந்தால் பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளாக அந்ததந்த துறையில் நிபுணத்துவம்பெற்றவர்களை உள்ளடக்கி இலங்கையின் அனைத்து பாகங்களிலும் இவ்வாறான ஆராய்ச்சியை செய்து எந்தெந்த இடங்களில் எந்ததந்த மதங்களுக்குரிய அடையாளங்கள் இருக்கின்றதோ அந்த மதங்களின் புனித பகுதியாக அந்த இடங்களை அடையாளப்படுத்தினால் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.

ஒரு இராணுவத்தளபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்ஸ இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்து இந்த நாட்டினை ஒரு இராணுவ ஆட்சிக்குள் கொண்டுசெல்வதற்கான முயற்சிகளைத்தான் முன்னெடுத்துவருகின்றார்.

தமிழ் பகுதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தோற்கடிப்பதற்கு எமது தமிழர்களும் இந்த பெரும்பான்மை கட்சிகளுடன் கைகோர்த்திருப்பதுதான் வெட்கப்படவேண்டிய வேண்டிய விடயம்.இதே அரசாங்கம் இந்த நாட்டில் ஆயுதப்போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவருகின்றபோது ஒரு இலட்சத்து 40ஆயிரத்திற்கும்மேற்பட்டவர்களை படுகொலைசெய்த அரசாங்கத்திற்காக அவர்களுடன் இணைந்து அமைச்சரவையில் செயற்படுவதற்காக அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகளை தட்டிக்கேட்காதவர்களாக அவர்களுடன் இணைந்து செயற்படுவது என்பது வெட்கப்படவேண்டிய வேண்டிய விடயம்.கிழக்கு தொல்பொருள் செயலணியை கூட பிழையான விடயம் என்று சொல்வதற்கு முடியாமல் உள்ளது.காரணம் ராஜபக்ஸ சகோதரர்களின் மனதை நோகடிக்க கூடாது என்று நினைப்பவர்கள் தமிழர்களுக்கான உரிமையினைப்பெறப்போகின்றார்களாம்,தமிழர்களின் மண்ணைப்பாதுகாக்கபோகின்றார்களாம்,கிழக்கினை மீட்கப்போகின்றார்களாம். எப்படி சாத்தியமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சி.வெற்றிபெற்றால் கூட ஒரு ஆசனத்தை சிலவேளைகளில் பெறக்கூடிய கட்சி எவ்வாறு கிழக்கினை மீட்கப்போகின்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தால்தான் ஒரு பேரம்பேசும் சக்தியாக தமிழ் மக்களுக்கான உரிமையைப்பெறும் சக்தியாக பேசமுடியும்.கடந்த காலத்தில் அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்ட நமது சமூகம் இந்த ஜனநாயக வழி போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழினத்தின் தோல்வியாகவே கருதப்படும்.அதன் பிறகு தமிழர்கள் நாதியற்ற சமூகமாக மாறும் நிலையேற்படும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கவேண்டும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக களமிறங்கியுள்ள பலருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் எத்தனை கிராமங்கள் இருக்கின்றது என்பது கூட தெரியாத நிலையே இருக்கின்றது.

நாங்கள் இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட சமூகம்.நாங்கள் தோல்வியடைந்த சமூகமாக வாழ்கின்றோம்.தமிழீழ கனவு கண்டு நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை இழந்து மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை இழந்து கோடிக்கனக்கான சொத்துகளை இழந்து ஆகக்குறைந்தது மாகாணசபைகளுக்காவது பூரண அதிகாரத்தினைப்பெறுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு போராடிவருகின்றது.

2015இல் தமிழ் மக்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அந்த அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றிணை உருவாக்குவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாடுபட்டது.அது அரசியல் புரட்சிகாரணமாக கிடப்பில்போடப்பட்டது.

அமையப்போகின்ற பாராளுமன்றத்தில் ராஜபக்ஸ சகோதரர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகின்றது.அதனைவைத்து அவர்கள் 19வது திருத்த சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.அதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றது.இந்த நாட்டின் இராணுவ அதிகாரியாக இருப்பவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்றார்.அவருக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.19வது திருத்த சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.அதன் காரணமாக 19வத திருத்த சட்டம் நீக்கப்படவேண்டிய தேவையுள்ளது.அதற்கு மேலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மிக குறுகிய காலத்திற்குள் உருவாக்கி இந்த நாட்டின் அரச நிர்வாகத்தினை கைப்பற்றக்கூடிய அளவுக்கு கொண்டுவந்தவர் பசில் ராஜபக்ஸ.அவர் இரட்டை பிரஜா உரிமையினை கொண்டிருப்பதனால் அவர் பாராளுமன்றம் செல்லமுடியாத நிலையுள்ளது.அதனை தடுப்பது இந்த 19வது திருத்த சட்டமாகும்.

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையில்லை.அதனை நிரூபிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்பட்டால் அந்தவேளையில் பலமான சக்தியாக கூட்டமைப்பு திகழுமானால் சில விடயங்களை சாதித்துக்கொள்ளமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கு நான்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உள்ளது.இது 2005ஆம் ஆண்டு மட்டுமே அடையப்பட்டது.அதன் பின்னர் அந்த பிரதிநித்துவம் சகோதர இனத்திற்கு செல்லும் நிலையுள்ளது.இதற்கு காரணம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் சோம்பேறித்தனமே காரணமாகும்.இதன்காரணமாகவே தமிழ் மக்களின் ஒரு பிரதிநிதித்துவம் இழக்கப்படுகின்றது.

எங்களது பிரதிநித்துவத்தினை நாங்களாகவே அவர்களுக்கு விட்டுக்கொடுக்கின்றோம்.எமது உரிமையினை விட்டுக்கொடுக்கின்றோம்.வாக்கு என்பது பீரங்கி குண்டினை விட வலிமையானது.அனைத்து படைகளையும் நாங்கள் கொண்டிருந்தபோதும் எமக்கான தீர்வினைப்பெறமுடியவில்லை.ஆனால் யாருக்கும் தெரியாமல் இடும் புள்ளடியினால் பலமாற்றங்களை செய்யமுடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமான சக்தியாக இருந்து குறைந்தது மாகாணசபைக்கான பொலிஸ்,காணி அதிகாரம்கொண்ட பூரண அதிகாரத்தினையாவது பெற்று எங்களை நாங்களே ஆளும் சுயாட்சியொன்றினை பெறாது விட்டால் அது நாங்கள் தமிழினத்திற்கு செய்யும் துரோகமாக கருதப்படும்.தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பது எமது வரலாற்றுக்கடமையாகும்.

Related posts