மட்டக்களப்பு மண்மீதும் மக்கள்மீது அதிக பற்றுக்கொண்ட சமூகசேவகி செல்வி மனோகரை நேசித்த உள்ளங்கள் இழந்து தவிக்கின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பணிக்குழு உறுப்பினரும்,மகளீரணி  தலைவியுமான திருமதி.செல்வி மனோகர் அவர்கள் புதன்கிழமை(18)காலை 11.00 மணியளவில் கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக மரணமடைந்துவிட்டார் என்னும் செய்தி தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை மட்டுமல்ல மட்டக்களப்பு மண்ணில் உள்ள ஒவ்வொரு பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவியையும்,அவரை நேசித்த உறவுகளையும்,மட்டக்களப்பு மாநகரசபையில் உள்ளவர்களையும் கிலி கொள்ளச்செய்து,எல்லோரையும் ஆழ்ந்த சோகத்தில் உறைய வைத்திருக்கின்றது.

1973.5.29 இல் பிறந்த செல்வி மனோகர் இரண்டு பிள்ளைகளின் தாயராவார்.மட்டக்களப்பு மண்மீதும்,மக்கள்மீதும் சமூகசேவைமீதும்,பாதிக்கப்பட்ட பெண்கள்,சிறுவர்கள்மீதும் அளவற்ற அன்புகொண்டவர்.அதிக பற்றுக்கொண்டவர் ஆவார்.தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரம்பகாலத்திலே இணைந்து சாதாரண உறுப்பினராக இருந்து கட்சியின் தலைவர் பணிக்குழுவில் இடம்பிடித்தவர்.இரவு பகலாக கட்சியின் மகளீர் அணியை உருவாக்கவேண்டும் என தீவிரமாக செயற்பட்டு கட்சியின் மகளீர் அணியை உருவாக்கி ஒரு கட்டுக்கோப்பான மகளீர் அணியை உருவாக்கி மகளீர் அணிச் செயலாளராக பெண்கள் மத்தியில் துடிப்போடு சேவை செய்து வந்தார்.மட்டக்களப்பு மண்ணில் பல பெண்கள் அமைப்புக்கள் இருந்தாலும் ஆளுமைமிக்க பெண்ணாக செல்வி மனோகர் செயற்பட்டார்.

“செல்வியக்கா இறந்துள்ளார்” என்னும் இறப்பு செய்தியானது பெரும்பாலானோரின் மனது ஏற்க மறுத்துள்ளதை பெரும்பாலானோர் கதைப்பதில் உணர முடிந்துள்ளது.இது உண்மையாக நீங்க சொல்லுகின்றீர்களா? எனும் கேள்விக்கு பதில் கூற மறுத்திருக்கின்றது.பலர் மனதுக்குள் அழுது கண்ணீர் சிந்தி பேசுவதையும்,சோகத்தில் புலம்புவதையும் என்னால் அவதானிக்க முடிந்துள்ளது.அந்தளவுக்கு செல்வி மனோகரின் நினைவலைகள்,சமூக சிந்தனை,ஏழைகளுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு எல்லோரையும் சோகத்தில் அதிரவைத்துள்ளது.அவ்வாறு தான் வாழ்ந்த காலத்தில் எல்லோரையும் சிரித்திட்டு நேசிக்கும் உன்னதப்பெண்ணாக செல்வி மனோகர் மட்டக்களப்பு மண்ணில் சுடர்விட்டு பிரகாசித்துள்ளார்.இதனை மறக்கவோ அல்லது மறைக்கவோ முடியாத இழப்புச்செய்தியாகும்.

கட்சியின் மூத்த தலைமைகளின் ஒருவராக இருந்து கட்சியை வளர்த்தெடுத்தமையில் செல்வி மனோகர் அவர்களின் பங்களிப்பு,அர்ப்பணிப்பு,அயராத உழைப்பு,தூரநோக்கு சிந்தனை ,கட்சியை நேசிக்கும் விசுவாசம்,கட்சியின் ஒவ்வொரு அடிமட்ட உறுப்பினர்களையும் மதிக்கும் பண்பு என்றும்  தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியாலும்,கட்சியின் தலைமைகலாளும் மறக்க முடியாதது.ஒரு கட்சியின் மகளீரணி செயற்பாடுகள் என்பதைத்  தாண்டி   பெண்களை அணிதிரட்டுவதிலும்,அரசியல் மயப்படுத்துவதிலும்,செல்வி அவர்களின் களப்பணிகளும் கடின உழைப்பும்,என்றும் போற்றத்தக்கன.

மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினராக இருந்து தமக்கு கிடைத்த அரசியல் அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தி மக்களுக்காகவே பணியாற்றுவதில் அயராது உழைத்தவர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மக்கள் போராட்டங்கள் நடைபெற்றாலும் செல்வி மனோகர் தலைமையில் பெண்களை,மகளீர்களை ஒன்று திரட்டி அப்போரட்ட இடத்திற்கு சென்று போராட்டத்தில் இறங்கி மக்களின் பிரச்சனைகளை முன்னெடுத்து உலகறியச்செய்யும் துணிச்சல்மிக்கவர்.குறிப்பாக மட்டக்களப்பில் தலைவிரித்தாடி பெண்களை தற்கொலைக்கு தூண்டிய நுண்கடன் பிரச்சனை,உன்னிச்சை குடிநீர் விநியோகத்திட்டத்தில் தமிழர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படாதை எதிர்த்து போராடிய போராட்டம்,வித்தியா படுகொலைக்கு கண்டனப்போராட்டம்,நாட்டில் அரங்கேறிய சிறுவர் துஸ்பிரயோக படுகொலைக்குரிய கண்டனப்போராட்டம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.இப்போராட்டத்தில் செல்வி மனோகர் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனை குரலாக ஒழித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதில் உழைத்த ஆளுமையாளர்.

ஏப்ரல் குண்டுத்தாக்குல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரியின் தலையை மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் புதைத்தபோது மட்டக்களப்பு மக்கள் கிளர்தெழுந்து பல போட்டங்கள் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றபோது செல்வி மனோகர் மகளீர் அணியையும்,மக்களையும் ஒன்று திரட்டி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து தற்கொலைதாரியின் தலையை கள்ளியங்காடு மயானத்திலிருந்து மீட்டெடுத்து காத்தான்குடி மையவாடியில் புதைப்பதற்கு துணிச்சலுடன் செயற்பட்ட சேவகியாவார்.இப்போராட்டத்தில் பங்குகொண்ட செல்வி மனோகர் பொலிசாரால் தாக்கப்பட்டு காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்றுள்ளதோடு,நீதிமன்ற வழக்கிற்கும் சென்று வந்தவர்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு தமது அரசியல் அதிகாரத்தின் ஊடாக பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் ஊடாக பல நிவாரணப்பணிகளையும்,வாழ்வாதார பணிகளையும் முன்னெடுத்தவர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் 34000 குடும்பங்களின் வாழ்வாதார விடயங்களுக்கு குரல்கொடுத்த சமூகசேவகி ஆவார்.பாராளுமன்றத்திலும்,மாகாண சபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25வீதம் உள்வாங்கப்பட வேண்டும் என முழுமூச்சுடன் குரல்கொடுத்தவர்.

வருடந்தோறும் இடம்பெறும் சர்வதேச மகளீர்தின நிகழ்வுகளை மக்கள் மயப்படுத்தி கிழக்கிலங்கை   பெண்களின் விடுதலை குரல்களை உலகறியச் செய்த அவரது அயராத பணியானது கனதிமிக்கதாகும்,போற்றத்தக்கதாகும்.

குறிப்பாக ‘நல்லாட்சி’ காலத்தில்  தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எதிர்கொண்ட நெருக்கடிமிகுந்த சூழலில்   கட்சியை பாதுகாப்பதில்  அவர் காட்டிய பிரயத்தனங்கள்   கட்சியின் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்கதோடு வரலாற்றில் பதியப்பட வேண்டியதாகும்.அரசியலையும்,மக்களையும் நேசித்த ஆளுமைமிக்க சமூகசேவகியை மட்டக்களப்பு மண் இழந்து தவிக்கின்றது.இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

“செல்வியக்கா என்று” அவரை விசுவாசித்தனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட செல்வி மனோகரது இழப்பில் மீளாத்துயரில் உழலும் அவரது கணவர்,குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் கட்சியின் தலைவர்,செயலாளர்,கட்சியின் உயர்பீடம், மகளீரணியினர் மற்றும் உறுப்பினர்கள், தொண்டர்கள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைமைப் பணிக்குழு சார்பில் எனது ஆழ்ந்த  அனுதாபங்களை பகிர்ந்து கொள்கின்றார்கள்.அனைவரதினதும் உள்ளத்தில் உறைந்துள்ள  செல்வியக்காவுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன்.

Related posts