மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ்பிரிவில் நேற்று புதன் கிழமை மாலை வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 13 பேர்கள் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புனித ஹஜ்ஜூ பெருநாள் தினத்திற்காக பொலனறுவை பிரதேசத்தில் இருந்து ஓட்டமாவடியிலுள்ள தமது உறவினர்களின் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் பயணம் மேற்கொண்டவர்கள் வாழைச்சேனை நாவலடி பகுதியில் எதிரே சென்ற காரினை முந்தி செல்ல முற்படுகையில் காரின் பின்பகுதியில் முச்சக்கரவண்டி மோதியதினால் அதில் பயணம் செய்த பெண்கள் சிறுவர்கள் என 7 பேர்கள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த தாயும் மகளும் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் நான்கு வயதுடைய சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்றைய தினம் மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிமெந்து லொறியில் வேன் மோதியதில் அதில் பயணம் செய்த 7 பேர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ள நிலையில் இவர்களில் 3 பேர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேனில் பயணம் செய்தவர்கள் பதுளை பிரதேசத்தில் இருந்து பாசிக்குடாவிற்கு சுற்றுலா சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார், லொறி, மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விபத்துக்குள்ளான வாகனங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களை இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.