மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் கட்டடங்கள் அமைப்பதற்கு நான்கு பேர்ச்சஸ் காணி போதுமானது என்ற தீர்மானம் மட்டக்களப்பு மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த அமர்வில் முன்மொழியப்பட்டிருந்த தீர்மானம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் கட்டடங்கள் அமைப்பதற்கு ஆகக்குறைந்தது 06 பேர்ச்சஸ் விஸ்தீரணம் கொண்ட காணி இருக்க வேண்டும் என இதுவரை இருந்த ஏற்பாட்டினைத் திருத்தி 04 பேர்ச்சர் காணியிலும் கட்டிடங்கள் அமைக்கலாம் என்ற தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகரசபை முதல்வர் மேலும் தெரிவிக்கையில், ”மட்டக்களப்பு நகருக்குள் இடப்பற்றாக்குறைகள் அதிகரித்து வருவதால் தம்மிடமுள்ள காணிகளின் விஸ்தீரணத்துக்குள் கட்டடங்களை அமைக்க முடியாமல் உள்ளதாக பொதுமக்கள் சிலர் என்னிடமும், மாநகரசபையிடம் தெரிவித்திருந்தனர்.
அந்த வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 9ஆவது மாநகரசபை அமர்வின் போது என்னால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்காலத்தின் சனநெரிசல், பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் பொருளாதார, சமூக நலனைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்திற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதும் மாநகர எல்லைக்குள் இது நடைமுறைப்படுத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.