மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் இழப்பு சமூக ஒற்றுமைக்கான பேரிழப்பாகும் : மீஸான் ஸ்ரீலங்கா இரங்கல் !

மதுரை ஆதீனம் காலமானார் எனும் செய்தி கவலையளிக்கும் செய்தியாக உள்ளது. சுவாசக்கோளாறால் மதுரை  தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர்  பொருத்தப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் எனும் செய்தி வெளிவந்த போது பலரும் அவருக்காக பிராத்தனை செய்தார்கள். எனினும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை ஆதினத்தின் உயிர் பிரிந்தது எனும் செய்தி கவலையளிக்கிறது என அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா விடுத்த அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளனர்.
 
அந்த அனுதாப செய்தியில் மேலும் ஹிந்து மக்களுக்கு மட்டுமின்றி இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய இன மக்களுக்கும் விருப்பத்துக்குரியவராக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் திகழ்ந்தார். ஏனைய சமூக மக்களையும் புரிந்துகொண்டு அவர்களுடன் எப்போதும் நல்ல உறவை பேணிவந்த அன்னாரின் இழப்பு சமூக ஒற்றுமைக்கான இழப்பாகவே நோக்க வேண்டியுள்ளது. 
 
மதுரை ஆதினத்தின் 292-வது குருமகா சந்திதானமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதினமும் ஒன்றாகும். இந்த நிலையிலிருந்து ஏனைய இன மக்களுடன் சகோதரத்துவத்தை கட்டிக்காத்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts