காலி, ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில், யுவதி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான பெளத்த பிக்கு மற்றும் அவரது சாரதி ஆகியோர் இரண்டு இலட்ச ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தெலிகட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் பத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்துள்ளார்.
தெலிகட சுனந்தாராம விகாரையில் சேவை புரியும், மான்பிடிய ஶ்ரீ சுமன (26 வயது) என்ற பிக்கு மற்றும் அவரது சாரதி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயது யுவதியான, குறித்த சாரதியின் காதலியே இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஹிக்கடுவை பிரதேசத்தில் நடைபெற்ற இரவு விருந்துபசார நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற யுவதியை, வீட்டில் இறக்கி விடுவதாகத் தெரிவித்து சந்தேகநபர்கள் இருவரும் அவரை வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
அதன்பின்னர் யுவதியை மது (பியர்) அருந்தச் செய்துள்ளதோடு, யுவதியை வாகனத்தில் வைத்து நள்ளிரவு 1 மணியளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
அவர்கள் பயணித்த வாகனம் பழுதடைந்ததை சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் பிரதேசவாசிகள் யுவதியை தெலிகட பொலிஸில் ஒப்படைந்ததோடு, வாகனம் தொடர்பிலும் அறிவித்துள்ளனர்.
இதன் பின்னர், தெலிகட பொலிஸின் குற்றப்புலனாய்வுப் பிரிவு, குறித்த யுவதியிடம் மேற்கொண்ட, ஆரம்பக்கட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இந்நிலையில் சந்தேகநபர்களை பிணையில் செல்ல அனுமதித்த நீதவான், வழக்கு விசாரணைகளை ஜுன் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.