இலங்கையில் மரண தண்டனைக் குற்றவாளிகளுக்கு, மீண்டும் மரண தண்டனை விதிக்கும் நடைமுறைக்கு சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவினை இன்றைய தினம் பிறப்பித்த உச்ச நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிவரை இந்த இடைக்காலத் தடையுத்தரவு அமுலில் இருக்குமென்றும் கட்டளை பிறப்பித்துள்ளது.
மூன்று நீதியரசர்களைக்கொண்ட குழாமே இந்த இடைக்காலத் தடையுத்தரவை வழங்கியுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் நாள் மரண தண்டனையை அமுல்ப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டதைத்தொடர்ந்து இதுவரை 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மரண தண்டனைக் கைதி ஒருவரின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன் வழக்கு தொடர்பான தனது வாதங்களை முன்வைத்திருந்தார்.
இந்த வாதங்களை ஆராய்ந்த நீதியரசர் குழாம், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக முன்னெடுக்கவுள்ள மரண தண்டனையினை தற்போதைக்கு வழங்கமுடியாதென்று கூறியதுடன் எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் நாள்வரை அந்த இடைக்காலத் தடையுத்தரவை அமுல்ப்படுத்தி கட்டளை வழங்கியது.