மலையக இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கக் கூடிய வகையிலான தொழில் பயிற்சி

•இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கக் கூடிய வகையிலான தொழில் பயிற்சி நிலையங்களை மலையகத்தில் நிறுவுவோம்….

•நுவரெலியா மாவட்டம் மற்றும் ஹட்டன் பிரதேசங்களை சுற்றுலாத் தலங்களாக அபிவிருத்தி செய்ய வேண்டும்….

•தமிழ் கலைத்துறையிலுள்ள இளைஞர்களுக்கு உலகின் உச்சத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பு….

•மலையகத்திலும், வடக்கிலும் உள்ள குறும் திரைப்பட கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை….

•மலையக மக்களுக்காக புதிய இளைய தலைமைத்துவமொன்று உதயமாகியுள்ளது…..

 
மலையக இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கக் கூடிய வகையிலான தொழில் பயிற்சி நிலையங்களை நிறுவுவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஹட்டன் டீ.கே.டப்ளிவ் மண்டபத்தில் இன்று (2020.07.30) நடைபெற்ற இளைஞர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,

‘மலையகத்தில் வாழும் மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுமத்த அரசாங்கத்தினதும், அவருடைய தலையீடும் அத்தியவசியமானது என மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் எந்நாளும் நம்பியிருந்தார். அவர் எப்போதும் அரசியல்வாதி என்ற ரீதியில் ஒரு கொள்கையுடன் செயற்பட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு பலமாக இருந்து செயற்பட்ட தலைவர்.

அதேபோல் கடந்த காலத்தில் சில அரசியல் தலைவர்கள் வெற்றிபெறும் பகுதிகளுக்கு சென்று பதவிகளை பெற்றாலும் தமது பகுதிகளுக்கும் மக்களும் சேவையாற்றுவது இல்லை என்பதை நாம் அறிவோம். மறைந்த அமைச்சர் தொண்டமான் தொடர்ந்தும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்த பிரதேசம் மட்டுமின்றி இந்த மாவட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.  அதேபோன்று வேலையும் செய்தார். அன்று அந்த காலப்பகுதியிலேயே நுவரெலியா மாவட்டத்திற்கு கார்பட் வீதிகள், கொங்கிரீட் வீதிகள் கொண்டுவந்து வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாடசாலை அமைத்தார். தொழில் பயிற்சி போன்று சுய தொழில்களை மேம்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பினார்.  இலங்கை அரசியல் வரலாற்றில் நுவரெலியா மாவட்டத்திற்கு அதிக வேலைகளை செய்தது மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மூலமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் காலப்பகுதியிலேயே என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும். கடந்த ஐந்து வருடங்களில் பல அபிவிருத்தி திட்டங்கள் பாதியில் தடைப்பட்டன. வேலைவாய்ப்புகளை இழக்க நேரிட்டது. அபிவிருத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது.

அன்று அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடன் வடக்கின் கல்வி நிலை குறித்து நான் கலந்துரையாடியிருந்தமை எனக்கு ஞாபகமிருக்கிறது. அதன்போது வடக்கிலும், தெற்கிலும் அதேபோன்று மலையகத்திலும் தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கான பாரிய குறைப்பாடு இருப்பது தெரியவந்தது. அன்று அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி வடக்கிற்கும் தெற்கிற்கும், எனது பகுதியான தெனியாய போன்ற தெற்கு பகுதிகளிலும் தமிழ் பாடசாலைகள் உள்ளன. இரத்தினபுரியில் தமிழ் பாடசாலைகள் உள்ளன. அன்று அவர்களின் தலையீட்டுடன்தான் 6 ஆயிரம் ஆசிரியர்கள், இந்த பிரதேசங்களின் பட்டதாரிகளை இணைத்துக் கொண்டு அப்பாடசாலைகளின் ஆசிரியர் குறைப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுத்தோம். அந்த காரணத்தினால் இன்று குறிப்பிட்டளவு கல்வித்துறையில் முன்னேற்றம் காணப்படுகிறது. எதிர்வரும் ஐந்து வருடங்களில் கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும். நாம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பாடசாலைகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த பிரதேசங்களில் விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்ட பல இளைஞர்கள் காணப்படுகின்றனர். அவர்களுக்கு விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் மைதானங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோன்று பாடசாலைகளின் மைதானங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். எதிர்வரும் காலத்தில் கிராமங்களில் வசிக்கும் உங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். படித்த மாணவர்களுக்கு தொழில் செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கக் கூடிய வகையில் தொழில் பயிற்சி நிலையங்களை இப்பகுதிகளில் நிறுவுவோம்.

இந்த நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் சுற்றுலாத்துறைக்கு மிகவும் உகந்த இடமாக விளங்குகிறது. நுவரெலியா, ஹட்டன் உள்ளிட்ட இந்த பிரதேசங்களை சுற்றுலாத் தலங்களாக அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோன்று இந்த பகுதிகளின் இளைஞர்களை அத்துறையில் பணியாற்றக் கூடியவாறு பயிற்சியை பெற்றுக்கொடுக்க வேண்டும். சகோதரர் ஜீவன் தொண்டமான் கலைஞர்கள் குறித்து நினைவுபடுத்தினார். நான் நம்பும் விடயம்தான் எமது நாட்டில் விசேடமாக தமிழ் கலைத்துறையிலுள்ள இளைஞர்களுக்கு உலகின் உச்சத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று இலங்கையில் மலையகத்திலும் வடக்கிலுமே அதிகமான குறும் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த துறையை மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நாட்டின் கலாசாரத்தை பாதுகாக்கும்போது ஒருவருக்கு ஒருவர் மீதான நம்பிக்கை கட்டியெழுப்பப்படுகிறது. விசேடமாக இளைஞர்கள் என்ற ரீதியில் நீங்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். இந்நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க போவது நீங்களே. நீங்கள் அனைவரும் நாட்டின் உச்சத்திற்கு செல்வதை காண நாம் விரும்புகிறோம். அரச பணியாளர்களாகவோ, வர்த்தகர்களாகவோ, வேறு தொழில் செய்பவர்களாகவோ இருக்க முடியும். நீங்கள் சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்டிருப்பதை காண்பதே எமது எதிர்பார்ப்பு. அதற்காகவே எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் வீட்டுப் பிரச்சினை, வீதி தொடர்பான பிரச்சினை, குடிநீர் பிரச்சினை மற்றும் வேலையின்மை போன்ற காரணங்கள் இன்று சமூகத்தில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அதேபோன்று தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பள பிரச்சினை. அமைச்சர் தொண்டமான் இறுதி தருணத்திலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இது குறித்தே கலந்துரையாடியிருந்தார். இந்த பிரச்சினை தொடர்பில் நாம் சிறந்த புரிந்துணர்வுடன் காணப்படுகிறோம்.

இன்று தொண்டமான் இல்லாவிடினும் அந்த பெயரையும் கௌரவத்தை அனைவரது மத்தியிலும் கொண்டு செல்ல சகோதரர் ஜீவன் தொண்டமான் முன்வந்துள்ளார். தொண்டமான் பரம்பரையுடன் எமது அப்பா, தாத்தா ஆகியோர் அரசியல் செய்தனர். எமது குடும்பமும் தொண்டமான் குடும்பமும் மூன்று பரம்பரையாக ஒன்றாக அரசியல் செய்துள்ளது. நானும் ஜீவனும் மூன்றாவது பரம்பரை. ஜீவன் ஒரு இளைஞர் என்ற ரீதியில் இந்த பிரதேச மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய வியூகத்துடன் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க முடியும் என நாம் நம்புகிறோம். மலையக மக்களுக்காக புதிய இளைய தலைமைத்துவமொன்று உதயமாகி உள்ளமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிரதேச இளைஞர்களிள் வேலைவாய்ப்பு பிரச்சினை, வீட்டு பிரச்சினை, அடிப்படை வசதிகள் என்பன குறித்து அந்த தலைவர் புதிதாக சிந்திக்க ஆரம்பித்துள்ளார். இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜீவனுக்கும் அவரது குழுவினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும் முழு ஒத்துழைப்பு இருக்கின்றது. ஜீவனுக்கு இளைய தேசிய தலைமைத்துவத்தை நோக்கி செல்வதற்கான திறமை உள்ளது என நான் நம்புகிறேன்.

கடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொண்டமான் மற்றும் ரமேஷ்வரன் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டோம். பிரதேச சபை தேர்தல், ஜனாதிபதி தேர்தல், மாகாண சபை தேர்தல்களின் போதும் உங்களை சந்திக்க வந்தோம். அது எங்களுக்கு உங்கள் மீதுள்ள நம்பிக்கையினாலேயே ஆகும். அந்த நம்பிக்கையினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த பகுதிக்கு வருவது. போதைப்பொருள் பிரச்சினை குறித்து ஜீவன் குறிப்பிட்டிருந்தார். அதற்கு நிரந்தர தீர்வொன்றை வழங்க வேண்டும். அது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாம் இளைஞர்கள் என்ற ரீதியில் அரசியல் செய்வதாயின் நாம் இளைய தலைமுறையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்பதை இங்கு ஞாபகப்படுத்துகின்றோம்.’

குறித்த மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் மற்றும் மருதபாண்டி ரமேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

நாமல் ராஜபக்ஷ ஊடக பிரிவு

Related posts