பட்டிருப்பு பாலத்தில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட மீனவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (22)காலை மீட்கப்பட்டுள்ளது.
பட்டிருப்பு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரை முதலை பிடித்து இழுத்து சென்றிந்தவேளை இன்றையதினம் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு பாலத்து வாவியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் மீன்பிடித்துக்கொண்டிருந்த பொறுகாமத்தைச் சேர்ந்த க.சுரேஷ்(வயது-34)எனும் மீனவரை முதலை பிடித்து சென்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தார்கள்.
இச்சம்பவம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(21) காலை 11.00 மணியளவில் பட்டிருப்பு வாவியில் இடம்பெற்றுள்ளது.
பொறுகாமத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை காலை மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் அவ்விடத்துக்கு வந்த முதலை மீனவர் ஒருவரை தந்திரோபாயமாக பிடித்து இழுத்துச் சென்றுள்ளது.இவ்வாறு முதலையினால் இழுத்துச் சென்றவரை தேடும்பணி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிவரையும் முன்னெடுக்கப்பட்டது.இவ்வாறு வாவியில் தேடியும் அவரின் உடலம் கண்டுபிடிக்காத நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது….
பட்டிருப்பு வாவியில் மின்னிவலையை பயன்படுத்தி ஐந்து பேர் கூட்டாக வாவியில் இறங்கி மீன்பிடித்துள்ளார்கள்.ஐந்துபேரும் வலையைப்போட்டு வாவியை கலக்கி வழமையாக மீனை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடும்போது ஐந்து பேரில் ஒருவராக நின்ற க.சுரேஷ் என்பவரை முதலை பிடித்து இழுத்துச்சென்றதாக அறியமுடிகிறது.ஏனய நால்வரும் கரைக்குவந்து தோணி களுடன் அவரை தேடிய போதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இன்று திங்கட்கிழமை(22) மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள்.