முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் முதியோர்களது நலன்கருதி பல்வேறுபட்ட நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முதியோர்களுக்கு தேவைப்பாடாக உணரப்பட்ட கட்டில், மெத்தை, படுக்கை விரிப்பு மற்றும் சுடுநீர் போத்தல் என்பன இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலக பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 15 பயனாளிகளுக்கு குறித்த உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர் வேலாயுதம் பத்மினி அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர் ஆர்.கிருபாகரன், சமூக சேவை கிளையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கிவைத்துள்ளனர். முதியோர் தேசிய செயலகத்தினால் முதியோர் நல மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் பிரதேச செயலக ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது சமூக பாதுகாப்பு ஒய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளப்பட்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கான காசோலையும் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.