(கலீல்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘ஒடங்கா 2’ பகுதியில் காட்டு யானையொன்று பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
குறித்த யானை கிராமத்திலுள்ள வீடுகளின் சுவர்களை உடைத்து சேதமாக்கியுள்ளதுடன் நெற்களஞ்சியத்திற்கும் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு உள்ளான வீட்டு மதில்கள், சேதமடைந்த நெற்களஞ்சிய பகுதிகளை பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதுதவிர பாதிப்புக்குள்ளான இடங்களை சுற்றி 50க்கும் அதிகமான யானைகள் இருப்பதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதேச மக்கள் கருத்துக்களை தெரிவிக்கையில், “யானைகள் அடிக்கடி தமது பிரதேங்களுக்கு வருகின்றமையினால் மிகவும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
மேலும் சொத்துக்களுக்கும் பெரும் சேதம் ஏற்படுகின்றது. ஆகையால் இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.