யாரிடமும் அனுமதி பெறப்படாமல் எந்தவித குடியிருப்புகளுமற்ற நன்செய் நிலத்தில் அவசரமாக மாவடிப்பள்ளி – கல்முனை வீதி செப்பனிடப்படுவதன் உள்நோக்கம் என்ன?இது விடயத்தில் எமது மக்களுக்கு நியாயமான சந்தேகமுள்ளது.விவசாயிகளைக் காப்பாற்றும் ஜனாதிபதி எமது மக்களின் விவசாயநிலத்தையும் காப்பாற்ற இவ்வீதியமைப்பை உடனடியாகத் தடைசெய்யவேண்டும்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேற்று(12) நண்பகல் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில்:
முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த பழம்பெரும் காரைதீவு தமிழ்க்கிராமத்தின் இருப்பை கபளீகரம் செய்யும் மாவடிப்பள்ளி – கல்முனை வயலோர கார்ப்பட்வீதியமைப்பதை பார்த்துக்கொண்டிக்கிறீர்களே! நீங்கள் அனுமதித்துவிட்டீர்களா? என்று என்னில் சந்தேகப்பட்டு காரைதீவு பொதுநல அமைப்புகளும் மக்களும் என்னை கேள்விக்கமேல் கேள்வி கேட்கின்றனர்.
எனது ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் இவ்வீதி அமைப்பு தொடர்பில் என்னிடம் யாரும் கலந்துரையாடவுமில்லை அனுமதி பெறவுமில்லை.
சரி என்னிடம்தான் அனுமதி பெறவில்லையென எண்ணிக்கொண்டு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜனைத் தொடர்புகொண்டு கேட்டேன். அவரும் தனக்கு எதுவும் தெரியாது என்னிடம் யாரும் கேட்கவுமில்லை அனுமதிபெறவுமில்லை என்று பதிலளித்தார்.
தொடர்ந்து கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளர் த.ராஜ்குமாரிடம் தொடர்புகொண்டுகேட்டபோது இதுபற்றி யாரும் பேசவுமில்லை கதைக்கவுமில்லை தனக்கு எதுவுமே தெரியாது என்றார்.
இறுதியாக இவ்வீதியமைப்புக்குப் பொறுப்பான வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனைப்பிராந்திய தலைமைப்பொறியியலாளர் தா.சிவசுப்பிரமணியத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது இது பற்றி தனக்கு ஒன்றும்தெரியாது. இது அக்கரைப்பற்று தலைமை அலுவலகத்தால் மேற்கொள்ளப்படுகிறது என பதிலளித்தார்.
இவ்வாறு காரைதீவு எல்லைக்குள் போடப்படும் இவ்வீதி அமைப்புடன் சம்பந்தப்பட்ட யாரிடமும் அனுமதி பெறாமல் இவ்வீதி ரகசியமாக சட்டவிரோதமாக போடப்படுவதன் நோக்கம் என்ன? என்ற வினா எழுகிறது.
எனவே நாட்டின் தலைவர் என்ற வகையில் ஓர் இனத்தை கபளீகரம் செய்யும் நோக்குடன் அமைக்கும் இவ்வீதியை உடனடியாக நிறுத்துமாறு இப்பிரதேச உள்ளுராட்சித்தலைவர் என்ற வகையில் பணிவாக வேண்டுகோள்விடுக்கின்றேன்.என்றா ர்.