முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தீப ஊர்தி பவனி’ கிளிநொச்சியிலிருந்து இன்று (வியாழக்கிழமை) பயணத்தை ஆரம்பித்துள்ளது.
தீப ஊர்திக்கு, கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இணைப்பாளர் கலாரஞ்சனி சுடரேற்றி, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து பயணத்தை ஆரம்பித்த தீப ஊர்தி, மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளுக்கு பயணிக்கவுள்ளது.
இதனை தொடர்ந்து நாளை இறுதி பயணமாக முள்ளிவாய்க்கால் நோக்கி பயணிக்கவுள்ளது.
இளைஞர்களால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள தீப ஊர்தி பவனி, வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணித்து மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.