வடகிழக்கு இணைந்த தாயக்கத்தை உருவாக்குவதற்கு வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ்கட்சிகளும்,தமிழ் அமைபுக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதனாலேயே வடகிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சியைப் பெறுவதில் எந்தவிதமான ஐயப்பாடுகளும் தோன்றாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களிடம் திங்கட்கிழமை(6.8.2018) மாலை 5.00 மணியளவில் அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்:-
கடந்த காலகட்டத்தில் தமிழர்கள் பல்வேறுப்பட்ட துன்பங்களை சந்தித்தித்துள்ளார்கள்.இதனை சாதிப்பதற்கு அஹிம்சைப் போராட்டம்,ஆயுதப்போராட்டம் என்று பல போராட்டங்களை நாடாத்தி போராட்டங்களை தொடர்ந்த வண்ணமுள்ளார்கள்.தமிழர்களின் போராட்டம் மாறாலாம்.போராட்டத்தின் வடிவங்கள் மாறாலாம்.தமிழ்தேசியக்கூட்டமைப்பின் எண்ணங்கள் ஒருபோதும் மாறாது.தமிழ்மக்கள் இன்று தீர்வுத்திட்டத்திற்கு ஏங்கியிருக்கின்ற இக்காலகட்டத்திலே அரசியல்தீர்வு எனும் விடயத்தை சொல்லிக்கொண்டு உள்ளார்கள்.தமிழர்களின் உரிமைகளை தமிழ்தேசியக்கூட்டமைப்பு பிரிக்கின்ற செயற்பாட்டிலே இந்த பேரினவாதக்கட்சிகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.இந்தக்கட்சிகளுக்கு உறுதுணையாக சர்வதேசத்தில் இருக்கும் வல்லரசு நாடுகளும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
2002 ஆம் ஆண்டு தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை சமாதான ஒப்பந்தம் எனும் போர்வையில் எவ்வாறு உடைக்கப்பட்டதோ அதே போர்வையில் தமிழ்தேசியக்கூட்டமைப்பை நல்லாட்சி அரசாங்கத்தில் உள்வாங்கிக் கொண்டு தீர்வுத்திட்டம் எனும் போர்வையில் இன்று தமிழர்களின் பலத்தை உடைக்கின்ற, தமிழர்களின் அரசியல்பலத்தை சின்னாபின்னமாக்குகின்ற செயற்பாட்டிலே பேரினவாத அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த செயற்பாடு தொடருமனால் தமிழ்மக்களுக்குரிய இருப்பு இல்லாமல் போகும் என்பது கேள்விக்குறியாகும் எனும் காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.இன்று இத்தீர்வுத்திட்டம் நடைபெறாவிட்டால் அல்லது தீர்வுத்திட்டத்திற்கான சரியான வழி கிடைக்காவிட்டால் அடுத்த கட்டத்தை தமிழர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.அந்த கேள்விக்கான விடை தமிழர்கள் அந்ததீர்வுக்கான திட்டத்திலே அனுபவிக்கின்ற அந்த வேதனையைவிட கூடுதலான வேதனையை பெருன்பான்மை இனத்தவர்கள் அனுபவிப்பார்கள் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்துக்கிடமில்லை.அந்த நிலை இந்த நல்லாட்சி அரசாங்கம்ஏற்படுத்தக்கூடாது.அதனை ஏற்படுத்துகின்ற நிலைப்பாட்டை இந்த அரசாங்கம் ஏற்படுத்துமென்றால் எங்களது போராட்டம் என்பது மறுவடிவிலே மறுரூபத்திலே எடுக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும் என்பதை இடத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.அந்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு தமிழர்கள் தயாராகவில்லை.அதனை ஏற்படுத்துவது சிங்கள பேரினவாதக்கட்சியாகும்.
இந்தநாட்டிலே எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டத்தை தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் தலைவர் முன்னெடுத்து வருகின்றார்.அத்தீர்வுத்திட்டத்திற்கு வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழர்களும்,தமிழ்கட்சிகளும் ஒன்று சேரக்கூடிய நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.இன்று வடகிழக்கில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல பின்னடைவுகளை சந்தித்துள்ளது.ஆனால் அந்த பின்னடைவுகள் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்குரிய பின்னடைவுவல்ல.அது வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுக்கும் ஏற்பட்ட பின்னடைவுகள்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.இந்த பின்னடைவுகள் சிங்கள பேரினவாதக்கட்சிகளால் ஏற்படுத்தப்பட்டு தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆளுவதற்கு போட்ட சதித்திட்டமாகும்.தமிழ் இனத்தை அடக்கி வாழலாம் என்பது பகற்கனவாகும். இந்த முன்னெடுப்புக்கு தமிழர்கள் ஒருபோதும் துணையிருக்க கூடாது.அந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தவேண்டுமென்றால் தமிழ்கட்சிகள், தமிழ் அமைப்புக்கள் ஒன்றுசேர வேண்டும்.ஒன்று சேர்ந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்ற ஒருகாலகட்டத்தில் இருக்கின்றோம்.எனவே ஒவ்வொரு தமிழர்களும் செயற்படுத்த வேண்டும்.அப்போதுதான் தமிழர்களுக்கான உரிமைக்குரல் தேசியத்திலும்,சர்வதேசத்திலும் ஒலிக்கும்.இன்று எமது கட்சிகளை உடைப்பதற்கும்,சின்னாபின்னமாக்குவதற்கும் தமிழர்களாகிய நாங்கள் வடகிழக்கில் பதிலடி கொடுக்க வேண்டும்.
கடந்தகாலத்தில் தமிழ்மக்களின் பலமாக இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளை இந்த நாட்டில் உள்ள சிங்கள பேரினவாதக் கட்சிகளும்,சர்வதேச நாடுகளும் தந்திரோபாயங்களை கையாண்டு சின்னாபின்னமாக்கியுள்ளார்கள்.அதேநிலைக்கு நாங்கள் தள்ளப்படக்கூடாது.அந்த நிலையேற்படுமானால் நாங்கள் பலவிதமான அதிக பாதிப்புக்களை சந்திப்போம் என்பதில் ஐயப்பாடுமில்லை.தமிழர்கள் ஒன்று சேர்ந்து பலமான இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
வடகிழக்கு இணைந்த சமஸ்டிமுறையிலான ஆட்சிக்கட்டமைப்பை உண்டுபண்ண வேண்டுமானால் தமிழ்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து சிறுதமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.தமிழர்கள் இந்தநாட்டிலே அனைத்து வசதிகளுடன் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஒற்றுமையுடன் அனைவரும் தமிழ்தேசியக்கூட்டமைபுடன் ஒன்றிணைய வேண்டும். தீர்வைப் பெறுவதற்கும்,வடகிழக்கு இணைந்த தாயகத்தை பெறுவதற்கும்,சமஸ்டி ஆட்சியை உருவாக்குவதற்கும் அனைத்து தமிழர்களும் பகமையையும்,குரோதத்தையும் மறந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பயணத்தில் இணைந்திருங்கள்.அப்போதுதான் தமிழர்களுக்கான சுயாட்சி,இறைமையுள்ள வடகிழக்கு நிருவாகத்தாயகம் ,சமஸ்டி பெறுவோம் எனத்தெரிவித்தார்.