வடகிழக்கு தமிழ்மக்களின் பேராதரவுடன் பொதுஜன பெரமுனவின் ஆட்சி மலரும்.பியசேன தெரிவிப்பு.

(க. விஜயரெத்தினம்)
 
வடகிழக்கு தமிழ்மக்களின் பேராதரவுடன் பொதுஜன பெரமுனவின் ஆட்சி மலரும்.பொதுஜன பெரமுனயின் அரசியல் வெற்றியானது எவராலும் தடுத்து நிறுத்த முடியாத திசையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும், கரையோரப்பிரதேச இணைப்பாளருமான பியசேன  தெரிவித்தார்.
 

அம்பாறை உகண  கொனாகொல்ல பிரதேசத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் கூட்டம் சனிக்கிழமை(31)காலை இடம்பெற்றபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்….
இந் நாட்டிலே பெரும்பான்மையான சமூகமாக நீங்கள் இருந்த பொழுதும் இங்கே காணப்படும் அபிவிருத்திகள் அனைத்தும் கீழ் மட்டத்திலே காணப்படுகிறது.இவற்றிற்கெல்லாம் காரணம் எந்த விதமான சமூக அக்கறையும் சமுதாய பற்றுமற்ற உள்ளூர் தலைவர்களை நீங்கள் தெரிவு செய்வதில் உள்ள குறைபாடேயாகும்.

காலை கடன்களை கழிக்க காடுகளையும் ,நீராடுவதற்கும்  நீர் அருந்துவதற்கு வாய்காலில் வரும் நீரையும் நம்பியிருக்க வேண்டிய நிலையும் ,மரணம் சம்பவிக்கும் என்றால் சங்கங்களை அமைக்க வேண்டிய துர்பாக்கிய நிலையும்,கிராமங்கள் அனைத்திலும் தொழில்வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளும் மிதமிஞ்சி காணப்படும் அவலம் இந்த பிரதேசங்களில் தொடர்கதையாக இருக்கிறது.

வசிப்பதற்கு வீடு மனையில்லை ,நிம்மதியற்ற வாழ்க்கை முறை ,கண்டும் காணாத ஏறுக்கு மாரான அரசியல்வாதிகள் இவர்களை தொடர்சியாக தெரிவு செய்ததன் அவலத்தை தான் இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.

எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனயின் தலைமையின் மூலம் இந்த அவலங்களுக்கு எல்லாம் சரியான தீர்வு காணப்படும்.கடந்த காலத்தில் இருந்ததைப்போல் அல்லாது கிராம மட்டத்திலே மக்கள் தலைமைகளை உருவாக்கி அவர்கள் இனம் காட்டும் குறைபாடுகள் அனைத்தும் முதற்கட்டமாக தீர்த்து வைக்கப்படும்.படித்து முடித்து விட்டு வீட்டிலிருக்கும் இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்படும்.அத்துடன் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் அரச தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்,இப் பிரதேசங்களில் காணப்படும் அவல நிலைக்கெல்லாம் உங்களது ஆலோசனையுடன் சரியான முடிவு கட்டப்படும்.

இனிமேலாவது உண்மையாக உங்கள் மீது அக்கறையுள்ள உள்ளூர் தலைமைகளை தேர்ந்தெடுக்க முனையுங்கள்.பொதுஜன பெரமுயின் ஜனாதிபதி வேட்பாளராகிய கோத்தபாய ராஜபக்ச எனும் தலைமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்பவரினால் தீர்கமாக சிந்தித்து அலசி ஆராய்ந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு பொருத்தமான தலைமை ஆகும்.அவருக்கு நிகர் அவரே.கலகம் விளைவிப்போரும் அவதூறு பரப்புவோரும் அபாண்டங்களை சுமத்துவோரும் எவ்வளவு தான் ஆட்பறித்தாலும் எமது வெற்றிப்பயணத்தின் தடையாக ஒரு துரும்பையும் போட்டு விடமுடியாது.

இந்த நாட்டை நேசிக்கும் தலைவர்களின் ஒட்டு மொத்த மக்களின் தெரிவுதான் எமது இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ஆவர்.எனவே எமது நாட்டையும் எம்மையும் கட்டிகாக்க கூடிய கல்வி, ஆற்றல் அறிவு, துயிலாமை, அஞ்சாமை,துணிவுடமை  இவை அனைத்தையும் ஒருங்கே பெற்ற கோத்தபாய ராஜபக்ச அவர்களை நாம் ஜனாதிபதியாக அடைய இருப்பது எமது நாடு செய்த பாக்கியமேயாகும்.

வெளிநாடுகளின் சதிவலையிலே பின்னப்பட்டு கிடக்கும் அவர்களின் கைக்கூலிகளாக செயற்படும் ஒரு சில டயஸ் போராக்களும், சஹ்ரானை தலையில் வைத்து கொண்டாடும் ஒரு  பிற்போக்கு சக்திகளும் அவர்கள் எவ்வளவு தான் ஆட்பறித்தாலும் அவர்களது கள்ளத்தனமான சிந்தனைகள் ஒரு நாளும் வெற்றியடையப் போவதில்லை.

பொதுஜன பெரமுனயின் அரசியல் வெற்றியானது எவராலும் தடுத்து நிறத்த முடியாத திசையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்த உடனே பாதி வெற்றியை அடைந்து விட்டோம்.மீதி வெற்றி இன்னும் சில நாளில் அறிவிக்கப்படும்.அதன் போதே உங்களது துயரங்கள் அனைத்தும் துடைக்கப்படும் என்றார்.நான் உங்களுக்காக நீங்கள் எனக்காக நாம் அனைவரும் இந்த நாட்டிற்காக என்று  கூறினார்.

Related posts