வடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்
யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது.எங்களைப் பொறுத்த வரை இராணுவம் பௌத்த சிங்கள இராணுவமாகவே உள்ளது. ஏனெனில் நாட்டில் 2/3 இராணுவத்தை வடக்கிலேயே வைத்திருக்கிறீர்கள். அதே நேரம் தெற்கிலே இராணுவ முகாமில் குண்டு வெடித்தாலும், குப்பை மேட்டில் குப்பை சரிந்து வீழ்ந்தாலும் பல இலட்சம் ரூபா செலவில் நட்ட ஈடு கொடுக்கிறீர்கள். இவை அனைத்தும் செய்யப்படவேண்டும். ஆனால், நாம் மாத்திரம் அடிமை இனம் என்ற சிந்தனையில் நீங்கள் செயற்படுவதன் ஊடாக உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.இராணுவம் யாழ்.கோட்டையை கேட்கின்றது. கோட்டை என்பது ஆக்கிரமிப்பின் சின்னமாகவுள்ளது. அது அருங்காட்சியமாக மாற்றப்பட வேண்டுமே தவிர அதில் இராணுவ முகாம்களை அமைக்க முடியாது.