வடக்கு, கிழக்கிலே கடின பந்து கிறிக்கெற் விளையாட்டைமேம்படுத்த கிறிக்கெற் சபையால் விசேட நடவடிக்கைகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடின பந்து கிறிக்கெற் விளையாட்டை மேம்படுத்துகின்ற செயல் திட்டங்களில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் ஆசிர்வாதத்துடன் இலங்கை கிறிக்கெற் சபை இதய சுத்தியுடன் ஈடுபட்டு உள்ளது என்று அமைச்சரின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஷிபான் மஹரூப் தெரிவித்தார்.
 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி பொறுப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் குழு உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபாவின் முன்னெடுப்பில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் அமைச்சரின் உயர் மட்ட குழுவுக்கும், கிறிக்கெற் கழகங்களுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை சந்திப்பு இடம்பெற்றது.
 
இதில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றொனி இப்ராஹீம் . அமைச்சரின் கிறிக்கெற் விளையாட்டு துறைக்கான இணைப்பாளர்  ஜெனரல் டனீஸ் டயஸ், றிஸ்லி முஸ்தபாவின்  செயலாளர் அல்ஜவாஹிர் ,இளைஞர் பாரளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.ரிஹான் உள்ளிட்டோரும் பேராளர்களாக கலந்து கொண்டதுடன் இலங்கை கிறிக்கெற் சபையால் கடின பந்து கிறிக்கெற் விளையாட்டுக்கான உபகரணங்கள் கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
 
இங்கு உரையாற்றியபோது மஹரூப் மேலும் தெரிவிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மென்பந்து கிறிக்கெற் ஆட்டத்தில் இருந்து மேம்பட்டு கடின பந்து கிறிக்கெற் ஆட்டத்தில் பரிணமிக்க வேண்டி உள்ளது, இதன் மூலமாகவே தேசிய மட்டத்தில் சாதனைகள் நிலை நாட்ட முடியும், இதன் மூலமாகவே இன்னுமொரு முரளிதரன் உருவாக முடியும், வளங்கள், வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி தருவதற்கு கிறிக்கெற் சபை தயாராகவே உள்ளது,   புதிய யுகம் ஒன்றை கடின பந்து கிறிக்கெற் துறையில் உருவாக்குவோம் என்றார்.

Related posts