வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பை மட்டும் ஆதரிப்பதே ஒரே வழி!

வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பை மட்டும் ஆதரிப்பதே ஒரே வழி!என முன்னால் மட்டக்கப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
 
வடக்கு கிழக்கு தாயகத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பல கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் களம் இறங்கவுள்ளன.
 
அந்தவகையில் விக்கினேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜங்கரநேசன் தலைமையிலான தமிழ்தேசிய பசுமை இயக்கம்,ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய நான்கு தமிழ்தேசிய கட்சிகளும் இம்முறை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வடமாகாணத்தில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளன.
 
இந்தநான்கு கட்சிகளும் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இருந்து செயல்பட்டவர்கள் என்பதும் தமிழ்தேசியகூட்டமைப்புமூலம் அரசியல் பிரபலம் அடைந்தவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் இந்த நான்கு கட்சிகளும் ஒன்றாக இணையமுடியாத நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பை மட்டும் ஒற்றுமையாக செயல்படவில்லை என குற்றம் காணும் விமர்சகர்கள் இதனை புரிந்து கொள்வது நல்லது.இந்த கட்சிகளுடன் தமிழ்தேசியத்துக்கு எதிரான இன்னும் பல கட்சிகளும் சுயேட்சைகுழுக்களும் வடமாகாணத்தில் தேர்தலில் போட்டியிடவுள்ளநிலையில் தமிழ்தேசிய மக்கள் வாக்குகளை சிதறடிக்காமல் எல்லோரும் வீட்டுச்சின்னத்துக்கு வாக்களித்து தமிழ்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்துவதே தமிழ் மக்களின் ஒற்றுமைக்கான வெளிக்காட்டலாகும்.
 
இதேவேளை வடமாகாணத்தில் தமிழ்தேசிய கட்சிகள் மொத்தமாக ஐந்தும் தமிழ்தேசியத்துக்கு எதிரான கட்சிகள் சிலவும் இம்முறை தேர்தலில் போட்டியிடும் அதேவேளை கிழக்குமாணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பிரதேசவாதக்கருத்துக்களை முன்னிறுத்தி பல கட்சிகள் அரசு சார்பு கட்சிகள் கிழக்கு மாகாண தமிழர் வாக்குகளை சிதறடிப்பு செய்வதற்காக போட்டியிடுவதுடன் பல தமிழ் சுயேட்சைகுழுக்களும் அரச ஆதரவுடனும் இஷ்லாமிய அரசியல் வாதிகளின் ஆதரவுடனும் போட்டியிட தயாராகவுள்ளனர்.
 
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கட்சிகள் போட்டியிடலாம் என எதிர்பார்கப்படுகிறது. கடந்த 2015, பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 26, அரசியல் கட்சிகளும், 30, சுயேட்சை குழுக்களுமாக மொத்தம் 56, கட்சிகளை சேர்ந்த 448 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இந்த 56 கட்சிகளில் மூன்று கட்சிகளில் இருந்து 5, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள்.
 
பலருக்கு விகிதாசார தேர்தல் முறைமை தெரியாமல் தாங்களின் தோல்வி நிச்சயம் என எண்ணி வாக்குகளை சிதறடித்து தமிழ் பிரதிநித்துவத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைக்கும் சதியில் இறங்கியமையே உண்மை. எனவே மக்கள் அவதானமாக எமது தமிழ் பிரதிநித்துவம் அதிகரிக்கவேண்டுமானால் வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் ஒரேதெரிவாக தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டும் இருக்கவேண்டும் என்பதே சரியான முடிவாக அமையும்.
 
 
 
 
 

Related posts