வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ளவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது. இந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ள வேண்டாம் எனக்கோரி முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று(வியாழக்கிழமை) கூடி ஆராய்ந்துள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்திசார் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இதற்கும் மேல் நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றை குறித்து பேசுவதற்கும் தீர்வினை காண்பதற்கும் சிறந்த களமாக ஐனாதிபதி செயலணி அமைந்துள்ளது.
எனவே செயலணியின் கூட்டத்தில் நிச்சமாக கலந்து கொள்ளவேண்டும் என பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் கோரிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.