தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்டு தமது இராஜாங்க அமைச்சுப் பதவியை இழந்ததோடு, விசாரணைகளை எதிர்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து அவர் புதிய கட்சியை ஆரம்பிப்பார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரனுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலண்டன் சென்றுள்ள அவர், அங்கு புலம்பெயர் அமைப்புள் சிலவற்றுடன் இதுத் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தமிழ்க் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரின் ஆதரவையும் விஜயகலா பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீள உருவாக வேண்டுமென்ற வகையில் கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியதோடு, தனது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த விஜயகலா, தற்போது அவர் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நான்கு பேர் அடங்கிய குழுவின் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.