ஆற்று மட்டம் இன்னும் உயர வேண்டும் அப்போதுதான் முகத்துவாரம் திறப்பது தொடர்பில் ஆலோசிக்க முடியும் என்றால் அனைத்து விவசாய நிலங்களும் நீரில் மூழ்கி, வேளாண்மை பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நடுத்தெருவிற்கு வந்த பின்னர் தான் முகத்துவாரம் வெட்டப்படுமா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) கேள்வியெழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பில் பெய்துவரும் கனத்த மழையினால் மட்டக்களப்பில் பல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வயல்நிலங்கள் நீரில் மூழ்கி வேளாண்மை பாதிப்புறுவதால் விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க முகத்துவாரம் வெட்டப்படுவது சம்மந்தமாக இன்றைய அதிகாரிகளுடன் கலந்துரையாடியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரமிருந்து பெய்துவரும் கனத்த மழையினால் மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு, போரதீவுப்பற்று போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டம் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழும் மாவட்டம் மழை வெள்ளம் பெருக்கெடுத்து வயல் நிலங்களிலும் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் முகத்துவாரத்தை வெட்டி ஆற்று நீர் கடலில் கலப்பதோடு வயல்நிலங்களையும் பாதுகாப்பதே வழமையாக நடைபெறும் விடயம்.
அந்த வகையில் தற்போது இந்த மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் வேளாண்மையை நம்பி வாழும் மக்களின் கஷ்டங்களை உணர்ந்து முகத்துவாரத்தினை வெட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்க அதிபர், கமநலசேவைகள் உதவிப் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடிபோது வீதி அபிவிருத்தி அதிகா சபையினரின் ஆலோசனை தேவைப்படுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். அதற்கமைவாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் தொடர்பினை ஏற்படுத்திய போது தற்போது ஆற்று நீர் மட்டம் 80 சென்றிமீட்டர் வரைதான் இருப்பதாகவும், ஆற்று நீர் மட்டம் 112 சென்றி மீட்டர் அளவிற்கு உயர்ந்தால் தான் தாங்கள் முகத்துவாரம் வெட்டுவதற்கு ஆலோசனை கூறுவதாகவும் தெரிவித்தார்.
ஆற்று நீரின் மட்டம் 112 சென்றி மீட்டர் உயர வேண்டும் என்பது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கணக்கீட்டின் படி ஆற்றினை அண்டிய பிரதான வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மூழ்க வேண்டும். அதாவது உதாரணமாகச் சொன்னால் பிள்ளையாரடி வீதி முற்றாக மூழ்க வேண்டும் என்பதே இதன் கருத்து. ஆனால் தற்போதைய ஆற்று மட்டத்தின் அளவில் பெரும்பாலான வயல் நிலங்கள் முழ்கி விவசாயிகள் பெரும் பாதிப்புற்றிருக்கின்றனர். வீதி மூழ்குவதைப் பார்க்கும் அதிகாரிகள் வயல்கள் மூழ்குவதற்கு வழி செய்ய மாட்டார்களா என்பதே எனது கேள்வி.
எனவே தற்போதைய ஆற்று நீர் மட்டம் 80 சென்றிமீட்டராக இருக்கும்போதே மேற்குறிப்பட்ட பிரதேசங்களில் பல வயல்நிலங்கள் நீரில் மூழ்கி வேளாண்மை பாதிப்புற்றிருக்கின்றது. இவர்கள் சொல்வது போன்று இன்னும் ஆற்று மட்டம் உயர வேண்டும் அப்போதுதான் முகத்துவாரம் திறப்பது தொடர்பில் ஆலோசிக்க முடியும் என்றால் அனைத்து விவசாய நிலங்களும் நீரில் மூழ்கி, வேளாண்மை பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நடுத்தெருவிற்கு வந்த பின்னர் தான் முகத்துவாரம் வெட்டப்படுமா? இவ்வாறு செய்வதால் மக்களுக்குக் கிடைக்கும் நன்மை என்ன?
எனவே அரசாங்க அதிபர் அவர்கள் இவ்விடயங்களையும், விவசாயிகளையும் கருத்திற்கொண்டு முகத்துவாரம் வெட்டுவதற்கான ஆலோசனைக் குழுவை உடனடியாகக் கூட்டி இந்த மூன்று பிரதேச செயலக விவசாயிகளின் இப்பரச்சினை தொடர்பில் கூடிய கவனம் எடுத்து அதற்கான தீர்க்கமான ஒரு முடிவை உடனடியாக எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்ற தெரிவித்தார்.