வீடமைப்பு தொடர்பில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பா.உ சாணக்கியன் வீடமைப்பு இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடல்

 வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வீட்டு வசதிகளற்ற மக்களுக்காக 06 லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற போதிலும் மேற்படி வீட்டினை பூரணப்படுத்துவது தொடர்பில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இராஜாங்க அமைச்சரிடம் தெளிவு படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று தெரிவித்தார்.

 
மட்டக்களப்பு மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை மற்றும் கட்டிடப் பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுரத்த அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
 
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இராஜாங்க அமைச்சருடனான சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற கிராமத்துக்கொரு வீடு எனும் திட்டம் தொடர்பாகவும், ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
 
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வீட்டு வசதிகளற்ற மக்களுக்காக 06 லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற போதிலும் மேற்படி வீட்டினை பூரணப்படுத்துவது தொடர்பில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சரிடம் தெளிவு படுத்தப்பட்டது. அதனடிப்படையில் வீட்டுத்திட்டத்திற்கான உரிய கொடுப்பனவுகள் அனைத்தும் வழங்கும் நடவடிக்கைகள் துரிதபடுத்தப்படும் என இராஜாங்க அமைச்சரால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
அத்துடன், ஏற்கனவே அமுல்ப்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்படாமல் இருக்கின்ற வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் தான் உரிய நடவடிக்கைகளை அமைச்சுக்கள் ஊடாக கலந்தாலோசித்து மேற்கொள்ள இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Related posts