கட்டுரை : நூருல் ஹுதா உமர்
20 வது சட்டமூல வரைபை முஸ்லிங்கள் ஆதரிப்பதா? இல்லையா? என்பதில் ஆயிரம் கருத்து வேறுபாடுகளும் கருத்து ஒற்றுமைகளும் இருக்கலாம். 20 வது சட்டமூல வரைபு முஸ்லிங்களுக்கு ஆபத்தா? நல்லதா? நாட்டுக்கு நல்லதா? கெட்டதா? என்ற வாதங்களில் இலங்கையர்களாகிய நாங்கள் மூழ்கியிருக்கிறோம். இருந்தாலும் விரைவில் சகல மர்ம முடிச்சிக்கலும் அவிழ்ந்து நாங்கள் எதிர்கொள்ள போகும் முக்கிய விடயமும் அதுதான்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் கூட வெளியிடப்பட்டுள்ளது. அந்த சட்டமூலத்தை நாட்டின் நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சரவையில் சமர்ப்பித்து அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இதற்கமைவாக வர்த்தமானி அறிவித்தல் கூட வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்கள் எதிர்த்தே தீருவோம் என எதிரணி தலைவர் சஜித் பேசிக்கொண்டிருந்தாலும் அவரின் பின்னால் உள்ளோர் இரவுகளில் எங்கு உணவருந்த செல்கிறார்கள். யார் யார் அவர்களுடன் இருந்து உணவருந்துகிறார்கள். அங்கு உணவு மட்டும்தான் அருந்துகிறார்களா? இல்லை நாட்டு விவகாரங்களையும் சேர்த்தே உட்கொள்கின்றனரா? என்ற கேள்விகளுக்கு அவர் விடை தேட வேண்டிய நேரம் வந்துள்ளது.
இதற்கிடையில் தமிழரசு கட்சியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழர்களின் வலியையும் காப்பாற்ற கடந்த 2005 இல், 2010 இல் 2015 இல் 2020 இல் என 20 வருடங்கள் போராடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்போதுதான் முஸ்லிங்களை காப்பாற்ற வேண்டியதும் முஸ்லிங்களின் எண்ணங்களுக்கும் முஸ்லிங்களின் அபிலாஷைகளுக்கும் முஸ்லிங்களின் தேவைகள், பாதுகாப்புக்கும் அடைக்கலமும் அடையாளமும் வழங்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனலாம்.
அரசியல் யாப்பின் 121 -1 யாப்பிற்கு அமைவாக உயர் நீதி மன்றம் முன்னிலையில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் என்ற திருத்த சட்ட மூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம், பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்த சட்ட மூலம் அரசியல் யாப்பின் 82 – 1 யாப்பிற்கு அமைவானதாகவும், அரசியல் யாப்பின் 82 – 5 யாப்பிற்கு அமைய, விசேடமாக பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், திருத்த சட்ட மூலத்தின் 3, 5, 14 மற்றும் 22 சரத்துக்கமைவாக அரசியல் யாப்பின் 4 ஆவது யாப்புடன் 3 ஆவது யாப்பிற்கு அமைவானது என்றும் அரசியல் யாப்பின் 83 ஆவது யாப்பிற்கு அமைவாக, சர்வஜன வாக்கெடுப்பின் போது பொது மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், இருந்த போதிலும் 3 மற்றும் 14 சரத்துக்களில் உள்ள முரண்பாடுகள் உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழு திருத்தத்திற்கு அமைவாக திருத்தம் மேற்கொள்வது நீக்கப்பட வேண்டும் என்றும், 5 ஆவது சரத்தில் உள்ள முரண்பாடு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள வகையில் பொருத்தமான திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் விலக்கிக்கொள்வதற்கு முடியும் என்றும் உயர் நீதி மன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு நாடு கடந்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அசைவுகளுக்கு ஆமாம் சாமி போட்ட முஸ்லிம் தலைவர்கள் இப்போது மிகப்பெரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டார். தலைவர் சட்டத்தரணி அஸ்ரப் காலமாகிய போது முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அரங்கில் இருந்த பலத்தினை ஒப்பிட்டால் இப்போது இருப்பது தூசிக்கு சமனாகும். யார் என்ன சொன்னாலும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தின் அடித்தளம் அம்பாறை. கடந்தமுறை 04 எம்.பிக்கள் இருந்த அம்பாறையில் இம்முறை 02 பேர்தான் இருக்கிறார்கள்.
அதில் முக்கியமானவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹரீஸ். உரிமை அரசியல் செய்வதில் சாமர்த்தியன். ஆளுங்கட்சி எம்பிக்களுக்கு மஹிந்த அரசிடம் இருக்கும் செல்வாக்கில் சரி நிகரான அல்லது சற்று அதிகமான செல்வாக்கு பெற்ற ஒருவர் அவர். இதையறிந்தே கடந்த தேர்தலில் அவரை தோற்கடிக்க உச்சகட்ட பலத்தை பாவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள். ஆனால் இறுதியில் தோற்றது என்னவோ ஹக்கீம் தான். ஹரீஸுக்கு ஊரில் ஒரு பெயர் இருக்கிறது. ஹரீஸ் தேர்தல் வியூகம் அமைப்பதில் அவருக்கு அவரே நிகர் என்று. அந்த வியூகத்தின் படி இம்முறை ஹரீஸின் ஆதரவு மஹிந்த அணிக்கே அதாவது 20 வது சட்டமூல வரைபுக்கு ஆதரவு.
மற்றவர் பைசால் காஸிம். அபிவிருத்தி அரசியலில் சிறந்தவர். தேர்தல் களத்தில் மயிலின் செல்வாக்கு வேட்பாளராக நின்ற நிந்தவூர் தவிசாளரை வெல்ல பல கோடிக்களை கொட்டி எம்.பியானவர். கட்டியாக முஸ்லிங்கள் வாழும் அம்பாறை மாவட்டத்தின் எம்.பி என்பதனால் முஸ்லிங்களை பற்றி அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்த்தித்து ஆதரவாளர்களுடன் பேசி ஒரு முடிவுக்கும் வந்துவிட்டார். கையை தூக்குவதை தவிர வேறுவழியில்லை என்று.
மட்டக்களப்பில் கடந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சரை தோற்கடிக்க உச்சகட்ட பலத்தை பாவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆனால் பண பலத்தை கொண்டு தலைவர் ஹக்கீமுக்கே தண்ணிகாட்டினார் ஹாபிஸ் நஸீர். இங்கும் இறுதியில் தோற்றது என்னவோ ஹக்கீம் தான். பண பலமும் நீண்ட காலமாக மஹிந்த அரசுடன் கொண்ட உறவும் இம்முறை பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீரின் ஆதரவு எந்த பக்கம் என்பதை எல்லோருக்கும் விளக்கியிருக்கும். இருந்தாலும் அவரின் அண்மைய கால செவ்விகளில் மிகத்தெளிவாக வட்டமிட்டு காட்டிவிட்டார் நான் யார்? எனது ஆதரவு யாருக்கு என்று.
இப்போது மிகுதியாக இருப்பது திருகோணமலை எம்.எஸ்.தௌபீக். கடந்த தேர்தலில் தப்பிப் பிழைத்து எம்.பியாக வந்த அவர் அரசியலில் நீடிக்க மேற் சொன்னவர்களின் முடிவையே தனது முடிவாக ஏற்பார் என்பது எல்லோரும் அறிந்த விடயம். இனியும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சஜித் புராணம் பாடினால். ஓய்வுக்கு விண்ணப்பம் போடுகிறார் என நாம் எடுத்துக் கொள்ளலாம்.
முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கோஷமிடுவது போன்று ரவூப் ஹக்கிம் அவர்கள்”சாணக்கிய தலைவராக” இருந்தால் அரசுக்கு ஆதரவாக கையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. நான் மேலே கூறிய விடயங்கள் எதுவுமில்லாது முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள் எல்லோரும் ஒரே எண்ணத்தில் பயணிக்கப் போகிறோம் என முடிவு செய்தால் அந்த முடிவும் அரசுக்கு ஆதரவான முடிவாகவே தான் அமைய வேண்டும். அதுதான் முஸ்லிங்களுக்கு நலவு.
150 மொட்டு ஆதரவு எம்.பிக்கள் இருக்கும் இந்த சபையில் சஜித் அணி எம்.பிக்கள் பலரும் (சுமார் 20 பேருக்கும் மேல்) இரகசிய ஒப்பந்தங்களுடன் சம்பந்தம் பேசிக்கொண்டிருக்கையில் சம்பந்தர் ஐயாவும் தருணம் காத்திருக்கிறார் என்பது நாம் அறியாமலில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள்ளும் குசுகுசுப்புக்கள் ஆரம்பமாகி விட்டது. அமோக ஆதரவுடன் நிறைவேற காத்திருக்கும் இந்த 20 வது சட்டமூல வரைபை எதிர்த்து முஸ்லிம் சமூகம் இன்னும் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டுமா என்பதை முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர். தோல்வியை சந்திக்க வாய்ப்பே இல்லாத இந்த 20 வது சட்டமூல வரைபை ஆதரிப்பதே முஸ்லிங்களுக்கு சாலச்சிறந்தது.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இருவரில் ஒருவரே திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முத்துனபின். அவரை இளம் ஆளுமைமிக்க அரசியல்வாதியாக காண்கிறேன். முதல் கோணல் மொத்தம் கோணலாகி விடாது அரசுக்கு ஆதரவளிப்பதையே உங்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம். மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் விதைத்த விதைகளை அறுவடை செய்ய அரசு தயாராகிறது என்பதை முஷாரப் அறியாமலுமில்லை. முஷாரப்புக்கு தலைவர் மேல் பாசம் இருக்கிறது. அதன் உண்மை தன்மையை பாராளுமன்றத்தில் வெளிக்காட்டுவார். முஸ்லிம் காங்கிரசும் மக்கள் காங்கிரசும் இணைந்து பெற்றெடுத்த பிள்ளையான புத்தளம் எம்.பி சலிசப்ரி ரஹீம் அரசை ஆதரித்தால் மட்டுமே தனது மாவட்ட பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம் எனும் முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவைகளின் சுருக்கமாக, இறுக்கமாகி இருக்கும் முஸ்லிம் அரசியலின் போக்கை தளர்த்த இப்போது இருக்கும் எல்லா கட்சிகளினதும் எம்.பிக்கள் சகலரும் ஒன்றிணைந்து தோற்க வாய்ப்பே இல்லாத 20 வது சட்டமூல வரைபை ஆதரிக்க வேண்டும். இதன் மூலமாவது அரசுக்கு முஸ்லிங்களின் மீது இருக்கும் அதிருப்தி சற்று குறையலாம். கெடுபுடிகள் சற்று குறையலாம்.
சஜித் வாக்குறுதி மீறுவதில் வல்லவர் என்பதையும் தலைமைக்கு பொருத்தமற்றவர் என்பதையும் அண்மைய கால நடப்புக்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். முஸ்லிங்களுக்கு பிரச்சினை வருகின்ற போது உடனடியாக உறங்குநிலைக்கு செல்கிறார் என்பதை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம் சமூகமும் நன்றாக விளங்கி இருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யாத அரசியல் தலைமையை நம்புவதை விட தொடர்ந்தும் எதிர்த்து நிற்கின்ற எமக்கு கடந்த காலங்களில் அமைச்சுக்கள் முதல் அரசின் அத்தனை சலுகைகளையும் வழங்கிய அரசுக்கு இம்முறையாவது நன்றி கடன் செலுத்த முன்வர வேண்டும்.
வெள்ளம் தலைக்கு மேலால் ஓடிக்கொண்டிருக்கிறது. மூழ்கி இறக்கும் நிலையில் முஸ்லிம் சமூகம் இருக்கும் இந்த நிலையில் முஸ்லிம் தலைவர்கள் முகப்பூச்சி (மேக்கப்) கலைகிறது என்று கவலைப்பட கூடாது. தங்களையும், தங்கள் சமூகத்தினையும் அந்த வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுவதே முதல்வேலையாக இருக்க வேண்டும். பின்னர் முகப்பூச்சிகள் பற்றி ஆற அமர உட்கார்ந்து சிந்திக்கலாம்.