19 ஆவது திருத்தத்தை வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் பிரசாரம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக முக்கிய ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை பேணப்படுகின்றது என்று கூறி, அதன்மூலம் ரணில் அரசியல் பிரசாரத்தை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையே வழங்கி வருகிறது என்றும் தேசிய மட்டத்தில் இன்று பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் நாடாளுமன்றம் தொடர்பிலான விசாரணைகளை புலனாய்வுப் பிரிவினரும், பொலிஸ் தரப்பினரும் மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்ட அவர், நெருக்கடியான கால கட்டங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்கள் பாதுகாக்கப்பட்டதாக கூறினார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் இன்று கேள்விக் குறியாக்கப்படுவதற்கு பிரதான காரணம் சபாநாயகரின் பொறுப்பற்ற தன்மையும், ஒரு தலைபட்சமான செயற்பாடுகளுமே என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.