துறைநீலாவணை கிராமத்தின் கரகாட்டக்கலைஞர் கலாபூஷணம் கந்தையா சோமசுந்தரம் தனது 78ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்ததொரு கூத்துக்கலைஞராக திகழ்ந்தும்,அரச திணைக்களங்களில் நடைபெறும் கலைநிகழ்வுகளிலும்,பல ஆலயங்களில் நடைபெறும் உற்சவ காலங்களிலும் கலந்துகொண்டு கரகம் ஆடியும், கிராமியக்கலைக்கு புத்துயிர் அளித்துவரும் கந்தையா சோமசுந்தரம் தனது இல்லத்தில் வியாழக்கிழமை(28)காலை 7.00 மணியளவில் வெல்லாவெளி மாலையர்கட்டில் இறைபதமடைந்தார்.
துறைநீலாவணை கிராமத்தில் பிறந்த இவர் கூத்துக்கலைகளில் சிறப்பாக அமைந்துள்ள கரகாட்டம் ஆடுவதில் வல்லவராக கிழக்கு மாகாணத்திலே திகழ்ந்தார்.இவர் தனது 18ஆவது வயதில் துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலயத்தில் முதன்முதலாக கரகம் ஆடுவதில் ஈடுபட்டார்.ஒர் சிறந்த கூத்துக்கலைஞராக திகழ்ந்த இவர் 2012 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அரசவிருதான கலாபூஷணம் விருதைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
2018ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி,பண்பாடு,கலாச்சார,விளையாட்டுதுறை அமைச்சினால் நடாத்தப்பட்ட தமிழ் இலக்கிய விழாவில் உயர்விருதான “வித்தகர் விருது” வழங்கியும்,பொன்னாடை போற்றியும் கௌரவிக்கப்பட்டார்.இவரை பல சமூக நிறுவனங்கள்,அரச திணைக்களங்கள் இவரின் கரகாட்டக்கலையை பாராட்டி கௌரவித்துள்ளது.
கரகாட்டக்கலைஞர்,கலைத்தென்றல்,வித்தகர் விருது,கலாபூஷணம் உட்பட பல விருதுகளை கரகாட்டக்கலை மூலம் பெற்று சிறந்த கலைஞராக வடகிழக்கு,மலையம் போன்ற பகுதிகளில் கரகம் ஆடி தனது கரகாட்டக்கலையை இறக்கும்வரையும் வளர்த்தெடுத்து கூத்துக்கலையையும்,கரகாட்டக்கலையையும் பேணிப்பாதுகாத்து வந்துள்ளார்.
சிறந்த சமூகசிந்தனையும்,கலைப்பற்றும் உள்ள சோமசுந்தரம் தமிழ்தேசிய கொள்கையுடன் இறுதிவரையும் மூச்சுவிட்டார்.இவர் எல்லைப் புறத்தித்திலிருந்து பல தமிழ் கிராமங்களை பாதுகாத்தவர்.