(எஸ்.குமணன்)
கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உண்மையில் விரும்பவில்லை.எமது உறவுகள் தற்போதுவரை வீதியில் அலைந்து திரிவதற்கும் அவரே காரணம் என அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை(25) கல்முனை பகுதியில் மாலை ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு ஒன்றில் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நியமனம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதிநிதிகள்
எங்களது உறவுகளை தொலைத்தவர்களில் மிக முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ .இவரால் தான் இன்று வரை நாங்கள் தெருத்தருவாய் அலைந்து திரிகின்றோம். அவரே இதற்கு முக்கிய சாட்சியம் கூற வேண்டும்.
ஜனாதிபதியாக இவர் வந்தால் மீண்டும் எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டலாம் .மீண்டும் ஒரு இன அழிப்பு உருவாகலாம் .அது மட்டுமன்றி எந்த அரசாங்கமும் பதவிக்கு வந்தால் யுத்த குற்றவாளிகள் என கூறப்படும் நபர்களை உயர்பதவிகளை வழங்கி அவர்களை அக்குற்றத்தில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாகவே எமக்கு ஐயப்பாடும் இருக்கிறது.
எனவே இவ்வாறான யுத்த குற்றவாளிகள் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் சர்வதேசம் தலையிட்டு எமது உறவுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.இந்த நாட்டில் சாதாரண குடிமகனுக்கு ஒரு சட்டமும் இனஅழிப்பு குற்றங்களை செய்தவர்களுக்கு இன்னொரு சட்டமும் இலங்கை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதனால் எந்த ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.எனவே சோகங்கள் ஒருபோதும் மறையப்போவதில்லை என்பதற்காகவே சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 30 திகதி வட கிழக்கில் பாரிய மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் வர்த்தக சங்கங்கள் முச்சக்கர வண்டி சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவினை எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டனர்.