யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கடத்தல் – விற்பனையை முற்றாக ஒழிக்க வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஷான் பெர்னாட்டோவால் சிறப்பு பொலிஸ் செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலணியின் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தச் செயலணி தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகள் குடாநாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் ஒட்டப்படவுள்ளன.
“யாழ்ப்பாணத்தில் மாவா போதைப் பொருள், போதைக் குளிசைகள், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
அவற்றை விற்பனை செய்வோருக்கும் பொலிஸாருக்கும் இடையே தொடர்பு உள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபருக்கு பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள்களின் கடத்தல் – விற்பனையை முற்றாக ஒழிக்க சிறப்பு பொலிஸ் செயலணியை மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார்.
அந்த செயலணிக்கு பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 0766093030 என்ற கைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு முன்வைக்க முடியும். முறைப்பாடுகளின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும்.
செயலணி துரிதமாக செயற்பட்டு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்களைக் கைது செய்வர். எனவே அனைவரும் இந்த செயற்றிட்டத்துக்கு ஒத்துழைக்கவேண்டும்” என்று வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத் தகவல்கள் தெரிவித்தன.