சா.நடனசபேசன்)
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை விட யாரை ஆதரிக்க கூடாது என்பதை பொறுத்தே தமிழர்கள் முடிவு அமையும் என என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அவரின் அலுவலகத்தில் 05/09/2019 இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேலும் கூறுகையில்.
தமிழ்மக்கள் நிதானமாவும் விவேகமாகவும் முடிவெடுப்பார்கள் இதில் எவரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை கடந்த கால ஜனாதிபதி தேர்தலில் எல்லாம் தமிழர் தரப்பு கையாண்ட அணுகுமுறை இதற்கு பாடமாக உள்ளது
ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின்போதும் தமிழ் மக்கள் முன் எழும் பிரதானமான கேள்வி. தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வருவது சாத்தியமற்றது என்ற நிலையில், பெரும்பான்மையின வேட்பாளர்களில் தமிழர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒருவரை, அல்லது குறைந்தபட்ச தீமை ஏற்படுத்தக்கூடிய ஒருவரை தெரிவுசெய்து ஆதரிக்கவேண்டிய நிலை எப்போதுமே தமிழர்களுக்கு, ஏன் அனைத்து சிறுபான்மை இனத்தவர்களுக்குமே இருந்து வருகிறது. இம்முறையும் அதுவே நிலை.
இம்முறை யாரை ஆதரிப்பது என்று தீர்மானிப்பதற்கு, கடந்த காலங்களில் தமிழர் தரப்பு எடுத்த முடிவுகள் – யாரை ஆதரிப்பது என்ற முடிவை தமிழர்கள் எடுக்க முடியும்.
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தீர்க்கமான ஒரு பிரச்சினையாக கடந்த 2005 ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க – மகிந்த ராஜபக்ஷ ஆகியோரில் யாரை ஆதரிப்பது என்ற கேள்வி அப்போது தமிழ் மக்கள் முன் எழுந்திருந்தபோது, ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பது என்ற ஒரு தந்திரோபாயம் அப்போது விடுதலைப் புலிகள் தரப்பால் கைப்பிடிக்கப்பட்டது. இந்த நோக்கத்துடன், தேர்தலைப் புறக்கணிப்பது என்ற ஒரு முடிவு-அந்த தேர்தலில் தமிழ்தரப்பால் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போதய காலக்கட்டத்தில் அந்த முடிவு சகல தமிழர் தரப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டது
இலங்கையில் போர்நிறுத்த உடன்படிக்கை என்ற ஒன்றைக் கொண்டுவந்து, அதன்வழி நோர்வே அனுசரணையுடனான பேச்சுவார்த்தைகள் நடக்கும் சூழலை முன்னின்று ஏற்படுத்தியவர் ரணில் விக்கிரமசிங்க என்ற அடிப்படையில் – இது புலிகளை பலவீனமாக்கும் ஒரு சதி என்ற புரிதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால், இந்த மென்-அணுகுமுறையைத் தொடர்ந்தும் பின்பற்றி புலிகளை மேலும் பலவீனப்படுத்துவார் என்றும், பதிலாக கடும்போக்காளரான ராஜபக்ஷவைத் தெரிவுசெய்தால் அவர் போரை ஒரு வழிமுறையாக தெரிவுசெய்யத் தூண்டி அந்த வழியில் விடுதலைப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்துவிடலாம் என்ற எண்ணம் இதன் பின்னால் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
நாம் நினைத்தபடியே ரணில் தோற்கடிக்கப்பட்டார். ராஜபக்ஷ ஜனாதிபதியானார்.
அன்றைய தேர்தல் புறக்கணிப்பு என்ற புலிகளின் தந்திரோபாயசெயல்பாட்டை அனைவரும் ஏற்றுக்கொண்டனர் என்பது உண்மை.
அதை இப்போது சத்திரசிகிச்சை செய்து தமது மேதாவித்தன அரசிலை இப்போது சிலர் காட்ட விளைவது அவர்களின் அறியாமையை தவிர வேறில்லை.
சரியோ பிளையோ அந்தந்த காலக்கட்டத்தில் கள சூழலையும் தமிழ்தேசிய அரசியல் பலத்தையும் பொறுத்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்பதை புரிந்து கொண்டால் நல்லது.
அதன்பின் விடுதலைப்புலிகள் மௌனத்திற்குபின் 2009,மே,18, க்குப்பின் 2010,ல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு கட்டளை இட்ட மகிந்த ராஷபக்சவும் களத்தில் நின்று இனப்படுகொலை செய்த இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவும் போட்டியிட்டபோது தமிழ்தரப்பு கட்டளை இட்ட அதிகாரதிமிரை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் மகிந்தராஷபக்சவுக்கு எதிராக வாக்களித்தோம் ஆனால் அதே அதிகார திமிர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார்.
இந்த தேர்தல் இடம்பெற்ற காலத்தில் முள்ளிவாய்க்கால் அவலத்தில் சிக்குண்டு தவிர்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வவுனியாவில் மன்னாரில் பல அகதிமுகாங்களில் முள்ளுவேலியில் அடைக்கப்பட்ட காலம் ஆனால் அந்த மக்களும் மகிந்தராஷபக்சவை தோற்கடிப்பதற்காக சரத்பொன்சேகாவை ஆதரித்தனர்.
அதன்பின் 2015, ஜனாதிபதி தேர்தலின்போது அதே திமிர்கொண்ட இனப்படுகொலை ஆட்சி நடத்திய மகிந்தராஷபக்சவை தோற்கடிப்பதற்காக அவருக்கு எதிராக பல கட்சி தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரி பால சிறிசேனாவை வேட்பாளராக நிறுத்தியபோது மைத்திரிமீது கொண்ட காதலால் அல்ல மகிந்தமீது கொண்ட வெறுப்பால் மைத்திரியை ஆதரித்து அவரை வெற்றியடைவைத்தனர்.
அவரின் வெற்றி இப்போது தமிழ்மக்களுக்கு வெறுப்பாக மாறிவிட்டது நல்லாட்சி பதிவு வைத்து நாடகம் ஆடிவிட்டார் என்ற மனக்குறை தற்போதய ஜனாதிபதிமீதும் ஆட்சி அதிகாரத்தில் பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க மீதும் தமிழ்மக்களுக்கு அதிருப்தி உண்டு.
அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு திருத்தம் என்பனவற்றை கிடப்பில் போட்டுவிட்டதாக தமிழ்மக்கள் குற்றம்சாட்டுவதை காணமுடிகிறது.
இவ்வாறான கட்டத்தில் மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலை இந்த ஆண்டுக்குள் சந்திக்கப்போகின்றோம்.
இதில் மோட்டுகட்சி வேட்பாளராக முன்னாள் இன அழிப்பு செயலாளர் (பாதுகாப்பு செயலாளர்) கோட்டபாய ராஷபக்ச, மக்கள்விடுதலை முன்னணி தலைவர் அநுர குமர திசநாயக்கா பெயர்களை அந்தந்த கட்சிகள் முன்மொழிந்துள்ள நிலையில் ஐக்கியதேசியகட்சி கூட்டு வேட்பாளரை தெரிவு செய்வதில் இழுபறி தொன்றியுள்ளது,
அந்த கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜீத் பிரமதாசாவை வேட்பாளராக நியமிக்குமாறு சிங்களமக்கள் மத்தியிலும் வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் மத்தியிலும் அழுத்தங்கள் பிரதமர் ரணில்மீது செலுத்தப்படுகிறது.
இருந்தபோதும் இன்னொரு சாரார் சபாநாயகர் கரு ஜெயசூரிய அல்லது பிரதமர் ரணிலை வேட்பாளராக நியமிக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகள் சிலரும் சஜீத் பிரமதாசாவை விரும்பவில்லை என்ற கருத்தும் நிலவுகின்றது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு வழமைபோலவே வேட்பு மனு தாக்கல் செய்த பின்பே வேட்பாளர்களுடன் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக கலந்துரையாடி ஒரு இறுதி முடிவுக்கு வரும்.
இருந்தபோதும் மொட்டு கட்சி வேட்பாளர் கொட்டாபாய ராஷபக்சவை ஆதரிக்கும் எந்த முடிவுக்கும் வரமாட்டார்கள் என்பது தெளிவு.
ஏனய ஐ.தே.கட்சி, வேட்பாளர் அல்லது ஜே.வி.பி வேட்பாளர் இருவரில் ஒருவராகத்தான் தெரிவு அமையும்.
யார் இம்முறை ஜனாதிபதியாக தெரிவானாலும் தமிழ்மக்களின் இனப்பிரச்சினை விடயத்திற்கான தீர்வை வழங்குவார்கள் என்று யாரும் கூறுவார்களானால் அது மடமை கருத்தாகவே அமையும் இருந்தபோதும் சர்வதேச இராஜதந்திர செயல்பாடுகள் அழுத்தங்கள் இலங்கை அரசுமீது என்றுமில்லாதவாறு பிரயோகிக்கப்படுகின்றது என்பது உண்மை.
எந்த சர்வதேச அழுத்தங்களையும் தமது இனவாத அழுத்தங்களால் வெற்றி கொள்ள முடியும் என்ற எழுதப்படாத விதி இலங்கை அரசியல் யாப்புக்கு மாற்றீடாக உள்ளதால் தமிழ்மக்களுக்கு யார் ஜனாதிபதியானாலும் எந்த நன்மையும் இல்லை.