(சா.நடனசபேசன்)
கடந்த ஆட்சியின் போது நேர்மையான ஊடகவியலாளர்கள் உண்மையினை வெளிக்கொண்டுவந்தபோது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர் இதனால் அன்று ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டு இருந்தது .அந்த நிலையினை தற்போதைய அரசாங்கம் மாற்றி ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சுதந்திரமாகச் செயற்படக் கூடிய நிலையினை ஏற்படுத்தி இருக்கின்றது என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தார்
கல்வி அமைச்சினால் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் 2 கோடி ரூபா செலவில் தொழில்நுட்ப அலகுக்கான கட்டிடம் திறந்துவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை அதிபர் என்.பிரபாகர் தலைமையில் இடம்பெற்றபோது அவர்தெரிவித்தார்.
இந்நிகழ்வில்; அதிதிகளாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்,நாவிதன்வெளிப்பிரதேச சபைத் தவிசாளர் த.கலையரசன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் ஒருநாட்டில் ஊடகத்துறை மிகவும் பிரதானமானது ஒரு நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் வல்லமை ஊடகங்களுக்கு உண்டு அவ்வாறன ஊடகங்கள் சுயமாகவும் தன்னிச்சையாகவும் செயற்படமுடியாத நிலை கடந்த ஆட்சியாளர்களது ஆட்சியின்போது மறுக்கப்பட்டு இருந்தது இன்று எந்த விடயமாக இருந்தாலும் அச்சமின்றி உண்மையினை ஊடகவியலாளர்கள் உலகறியச் செய்வதுடன் ஊடகவியலாளர்களை அரசு பாதுகாக்கின்றது இந்தப் பெருமையினை ஆட்சியில் இருக்கும் அரசாங்கமே ஏற்படுத்தியது.
கடந்த கால ஆட்சியில் கல்விக்கு மிகக் குறைவான நிதி மாத்திரம் ஒதுக்கப்பட்டு இருந்தது அவர்களால் கல்விக்கு பெரும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை ஆனால் தற்போது கல்விக்காக ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் பெருந்தொகையான நிதியினை வழங்கி கிராமப்புற மாணவர்களும் நகர்புறமாணவர்கள் போன்று எவ்வித அசௌகரியங்களும் இல்லாது கல்வியினைத் தொடர்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது.
அது மட்டுமல்ல ஏனைய அனைத்து துறைகளினது முன்னேற்றத்திற்காக அரசினால் பல பங்களிப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நாவிதன்வெளிப்பிரதேசம் கடந்தகால யுத்தத்தின் போது பல வழிகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்து இன்று கல்வி,பொருளாதாரம்,விவசாயம் உட்பட பலதுறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றது
குறிப்பாக சம்மாந்துறை கல்விவலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் நஜீம் அவர்கள் இன,மதம் என்றபாகுபாடு இன்றி சமத்துவமா இப்பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு உழைத்துக்கொண்டிருக்கின்றார் அவரது சேவையினைப் பாராட்டுகின்றேன் என்றார்