-
(க. விஜயரெத்தினம்)3 பிரதான வேட்பாளர்களுள் தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரக்கூடியதாக எந்தவொரு வேட்பாளரும் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்….
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்ணைமூடிக்கொண்டு நாங்கள் ஆதரிக்கவில்லை.அப்போதிருந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வடக்கு–கிழக்கை இணைத்தல், அரசியல் தீர்வு, கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய ஆவணங்களைப் பார்த்ததன் பின்னரே நாம் அவருக்கு ஆதரவு வழங்கினோம். அதனை நாங்கள் வெளியிட வேண்டாம் என்ற ரீதியிலேயே நாம் அதனை வெளியில் சொல்லவில்லை.ஆனால் எமது சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் மக்களிடம் சொல்லவேண்டிய தேவை இருந்ததன் காரணமாக சரத் பொன்சேகாவிடம் நாங்கள் செய்து கொண்ட எழுத்து மூலமான உடன்படிக்கை பெற்றிருக்கின்றோம் என்பதைக் கூறிவிட்டார்.
அதன் பின்னர் சிங்கள ஊடகங்கள் சரத் பொன்சேகா நாட்டைப் பிரித்துக் கொடுக்கப்போகின்றார் எனத் தெரிவித்து, அதனை மீண்டும் மீண்டும் சிங்கள ஊடகங்கள் வெளிப்படுத்தியதன் காரணமாகத்தான் சரத் பொன்சேகா 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றிருந்தார்.
தமிழ்மக்களின் போராட்டத்தின் வடிவங்கள்தான் தற்போது மாறியுள்ளன.மாறாக இலட்சியங்கள் இதுவரையில் மாறவில்லை.தந்தை செல்வா எடுத்த அந்த அகிம்சை ரீதியான போராட்டம் தலைவர் பிரபாகரனால் ஆயுத ரீதியாக முன்னெடுக்கப்பட்டு தற்போது இராஜதந்திர ரீதியாக எமது தலைவர் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார். தற்போது எமது விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் தீர்மானிக்கின்ற சக்தியாக மாறியுள்ளது. 50 ஆயிரம் மாவீரர்கள் மற்றும் 3 இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் இழந்துள்ளோம்.
போராளியின் நிகழ்வுகளையும், தமிழர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையும் ஏன் நினைவு கூரப்படவேண்டும் என்றால் எவ்வாறான தியாகங்களை எமது மக்கள் செய்திருக்கின்றனர் என்பதனை எமது அடுத்த சந்ததியினருக்கு அறியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.மாறாக இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிப்பதற்காக வேண்டியோ, அல்லது ஆயுதப்போராட்டம் ஏந்தி விடுதலை பெறுவதற்காகவோ அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நிறைவு பெற்று 10 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள போதிலும் எந்தவொரு தீர்வும் எமக்கு பேச்சுவார்த்தை மூலமாக கிடைக்கப்பெறவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனித்ததிற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வளவோ விட்டுக்கொடுப்புடன், மிகவும் நேர்த்தியாக செயற்பட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்ட வரலாறு கிடையாது. ஆனால் எமது தலைவர் சம்பந்தன் கலந்துகொண்டிருக்கின்றார். எக்காலத்திலும் தேசியக் கொடியைப் பிடித்த வரலாறு கிடையாது. ஆனால் குறித்த ஒரு மே தின நிகழ்வில் தற்செயலாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொடுத்த கொடியை சம்பந்தன் பிடித்துவிட்டார் என்ற கருத்துக்கள் எழுந்திருந்தன. இவ்வாறு பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்திருந்த போதிலும் எமக்கு இதுவரையில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் நாங்கள் இன்னுமொரு ஜனாதிபதித் தேர்தலை சந்திக்க இருக்கின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியாக மக்கள் ஆணையைப் பெற்ற கட்சியாகத்தான் இன்றுவரை உள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது முடிவை சர்வதேசம் வரை பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களில் கோத்தபாய ராஜபக் ஷ, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகிய 3 முதன்மை வேட்பாளர்களில் ஒருவர் தான் ஜனாதிபதியாக வரப்போகின்றார். ஏனையோர் போடுகாய் வேட்பாளர்களாக உள்ளனர். 3 பிரதான வேட்பாளர்களுள் தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரக்கூடியதாக எந்தவொரு வேட்பாளரும் இல்லை.